திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட 7 பேரில் இதுவரை 4 பேரின் உடல்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மூவரின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.
கரைகடந்த ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது.
குறிப்பாக திருவண்ணாமலை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தீபமலையில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அதன் அடிவாரப் பகுதியான வ.உ.சி நகர் கருமாரியம்மன் கோயிலின் பின்புறத்தில் உள்ள வீட்டின் மீது நேற்று மாலை சுமார் 40 டன் எடை கொண்ட பாறை உருண்டு வந்து விழுந்தது. இதில் அந்த வீடும், அந்த வீட்டில் தங்கியிருந்த ராஜேந்திரன், மீனா அவர்களது இரு பிள்ளைகள், உறவினர் பிள்ளைகள் உட்பட மொத்தம் 7 பேரும் சிக்கினர்.
சம்பவம் அறிந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். ஆனால் தொடர் மழை மற்றும் இருட்டியதால் நேற்று இரவு மீட்பு பணிகள் தடைபட்டு, இன்று காலை மீண்டும் தொடங்கியது.
பாறை விழுந்த இடத்திற்கு நேரில் வந்த அமைச்சர் எ.வ.வேலு மீட்பு பணிகளை துரிதப்படுத்த, தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்தினர்.
குறுகிய சாலை வசதிக்கொண்ட அந்த பகுதியில் ஒரு வழியாக ராட்சத இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்தது.
இந்த நிலையில் மண்ணுள் புதைந்து சிதைந்த நிலையில் ஒரு சிறுவனின் உடல் முதலில் மீட்கப்பட்டது. இதனைக் கண்ட மீட்பு படையினரே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அதனையடுத்து ஒரு சிறுமியின் உடல் மீட்கப்பட்ட நிலையில், பாறை விழுந்து கடந்த 24 மணி நேரமாக மண்ணில் புதையுண்ட 4 பேரின் உடல்களின் பாகங்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது.
இதனைக்கண்ட அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதக் காட்சி காண்போரை கலங்க செய்தது.
மீட்கப்பட்ட உடல்கள் அனைத்தும் திருவண்ணாமலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 பேரின் உடல்களை கொட்டும் மழைக்கிடையே தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
மழை வெள்ள பாதிப்பு… ரூ.2000 கோடி வேண்டும் : பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்!
விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை!
வெள்ளத்தில் புதுச்சேரி : ரூ.5000 நிவாரணம் அறிவித்த ரங்கசாமி
புயல் பாதிப்பு… நிவாரணம் வழங்கப்படுமா? : ஸ்டாலின் பதில்!
இரண்டு நாட்கள் மட்டுமே சட்டப்பேரவை கூட்டத்தொடர் : அப்பாவு அறிவிப்பு!