விழுப்புரம் அருகே உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் மேலும் 5 பேர் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்க வைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்தனர்.
இந்த ஆசிரமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்த நிலையில், சலிமான் கான் என்ற நபர் இந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த தனது மாமாவை பார்க்க சென்ற போது, அவர் ஆசிரமத்தில் இல்லை. எனவே உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸாரும், வருவாய்த்துறையினரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் தான் ஆசிரமம் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவதாகவும், ஆசிரமத்தில் இருப்பவர்கள் அடித்து துன்புறுத்தப்படுவதாகவும் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாகவும் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின.
இதையடுத்து 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா மற்றும் ஊழியர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆசிரமத்தில் இருந்த 33 பெண்கள் உட்பட 203 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 99 பேர் பிப்ரவரி 15 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 44 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். மீதம் உள்ள 60 பேர் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை வளத்தி, கடலூர் காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் கோட்டக்குப்பத்தில் இந்த ஆசிரமத்தின் கிளையிலிருந்த 25 பேர் மீட்கப்பட்டு, விழுப்புரம் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து போலீசார் கைதானவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆசிரமத்தில் இருந்து மேலும் 5 பேர் காணவில்லை என்று கெடார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் (80), அவரது மகன் முத்து விநாயகம் (45), புதுவையை சேர்ந்த நடராஜன் (42), விழுப்புரத்தை சேர்ந்த காளிதாஸ் (60), தஞ்சையை சேர்ந்த பத்மா (47) ஆகிய 5 பேர் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரை அடுத்து ஆசிரம நிர்வாகி ஜுபின் மற்றும் அவரது மனைவி மரியா மீது மேலும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று (பிப்ரவரி 17) விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், ஆசிரமத்தில் நிகழும் மர்மம் தொடர்பாக 4 தனிப்படைகளை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த தனிப்படை பெங்களூருவில் இருந்து விசாரணையைத் தொடங்கவுள்ளது.
மோனிஷா
யுஜிசி நெட் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு!
மதுரை மெட்ரோ திட்டத்திற்கு டெண்டர் கோரியது மெட்ரோ நிர்வாகம்!