மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள மின் நுகர்வோர், தங்களின் மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்சாரத் துறை கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது.
கடந்த நவம்பர் 28 முதல் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை பொதுமக்கள் இணைத்து வருகின்றனர். இந்த பணிக்காக முதலில் ஜனவரி 31 வரை கால அவகாசம் வழங்கியிருந்த மின்சாரத் துறை இந்த அவகாசத்தைப் பிப்ரவரி 15 வரை நீட்டித்தது.
அதன்படி நேற்று மாலை வரை 2.59 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன என்று மின்சாரத் துறை தெரிவித்திருந்தது.
இது மொத்தமுள்ள 2.67 கோடி வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி மற்றும் விவசாய இணைப்புகளில் 97.07% ஆகும்.
இதுவரை இணைத்திடாதவர்கள், கடைசி நாளான இன்று மாலைக்குள் விரைந்து இணைத்திட வேண்டுகிறேன் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் இன்னும் 7 லட்சம் பேர் வரை ஆதார் எண்ணை இணைக்கவில்லை.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 15) ஈரோடு கிழக்கில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இன்னும் 7 லட்சம் பேர் இணைக்கவில்லை.
எனவே மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வரும் பிப்ரவரி 28ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது.
தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் பாதிக்கப்பட்டதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
பிரியா
நட்சத்திர கிரிக்கெட்: பங்கேற்பது யார் யார்?
காவிரி ஆற்றில் மூழ்கி 4 சிறுமிகள் பலி: 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!