கலப்படம், செயற்கை நிறமூட்டிய ஏலக்காய்கள் விற்பனைக்கு வருவதால் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மசாலாப் பொருட்களுக்கான இந்திய அரசாங்கத்தின் ஒழுங்குமுறை மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு நிறுவனமான ஸ்பைசஸ் வாரியம் புதிய முடிவை எடுத்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரண்டு லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது.
இங்கு விளைவிக்கப்படும் ஏலக்காய் இடுக்கி மாவட்டம் புத்தடி, தேனி மாவட்டம் போடியில் ஸ்பைஸ் வாரியத்தின் கீழ் உள்ள மின்னணு ஏல வர்த்தகம் நடக்கிறது.
தனியார் ஏல நிறுவனங்கள் மூலம் வாரத்துக்கு ஆறு நாள்கள் காலை மற்றும் மாலையில் ஏலம் நடக்கும். இதில் 14 நிறுவனங்கள் ஏலம் நடத்துகின்றன.
இந்த வர்த்தகத்தில் குறைந்தபட்சம் 80 ஏலக்காய் வியாபாரிகள், ஏற்றுமதி நிறுவனங்களின் முகவர்கள் பங்கேற்பார்கள். இதன் மூலம் சராசரியாக 80,000 கிலோ வரை ஏலக்காய் வர்த்தகம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கலப்படம், செயற்கை நிறமூட்டிய ஏலக்காய்கள் விற்பனைக்கு வருவதால் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் துபாயில் நடந்த ஒரு வார உணவுப் பொருள் கண்காட்சியில் இந்திய ஏலக்காய்க்கு ஆர்டர்கள் கிடைக்கவில்லை என வர்த்தகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வளைகுடா நாடுகளான துபாய், அபுதாபி, கத்தார், குவைத் போன்ற நாடுகளில் இடுக்கி ஏலக்காய்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், தற்போது இடுக்கி ஏலக்காயில் கலப்படம் செய்வதாலும், செயற்கை நிறமூட்டி பயன்படுத்துவதாலும் தரம் கேள்விக்குறியானது.
ஏற்றுமதி நிறுவனங்கள் தரத்தை பரிசோதனை பார்த்துவிட்டு அதிக ரசாயனத் தன்மை இருப்பதாகக் கூறி இடுக்கி ஏலக்காயைத் தவிர்க்கத் தொடங்கினர்.
இதனால் ஏல விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உணவு மற்றும் தரக்கட்டுப்பாட்டு பரிசோதனை மூலம் ஏலக்காயை பரிசோதித்து விற்பனைக்கு எடுக்க வேண்டும் என ஏல வர்த்தகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்கெனவே ஆன்-லைன் வர்த்தகத்தில் தரமற்ற ஏலக்காய் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சில நிறுவனங்கள் ஆன்-லைன் வர்த்தகத்தில் ஈடுபட ஸ்பைசஸ் வாரியம் தடை விதித்திருந்தது.
தற்போது வங்கி கிராயண்டி, விவசாயிகளுக்கு குறிப்பிட்ட நாளில் பணம் பட்டுவாடா உள்ளிட்ட ஏற்கெனவே உள்ள நிபந்தனைகளின்படி ஆன்லைன் ஏலம் நடத்த ஸ்பைசஸ் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
இதில் மின்னணு ஏல மையங்கள் (இ-ஆக்ஷன்) உள்ள புத்தடி, போடியில் மீண்டும் இந்த வாரம் முதல் ஆன்லைன் ஏலம் நடக்கவுள்ளது. சில தனியார் நிறுவனங்கள் மின்னணு ஏலத்தில் பங்கேற்க அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பச்சை மிளகாய் ஊறுகாய்
உக்ரைன் அதிபரை விட உக்கிரமா இருக்காரய்யா… அப்டேட் குமாரு
சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: குற்றவாளி நடத்திய நாடகம்… புதுச்சேரியில் நடந்தது என்ன?