விரிவடைகிறது சென்னை மாநகரம்: எங்கிருந்து எதுவரை?

சென்னை பெருநகர எல்லையை அச்சரப்பாக்கம், அரக்கோணம் வரை விரிவுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் இன்று (செப்டம்பர் 19) மூன்றாம் முழுமை திட்ட தொலைநோக்கு ஆவணம் தயாரித்தல் (Master Plan-3) பயிலரங்கம் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது.

இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி, சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த பயிலரங்கத்தில் உலக வங்கியின் நிதியில் மூன்றாவது முழுமை திட்டம் செயல்படுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது முழுமை திட்டம் 2026 இல் முடிவடைய உள்ள நிலையில், 2027 முதல் 2046 ஆண்டுக்கான சென்னை மாநகர வளர்ச்சியின் முழுமை திட்டம் மற்றும் அதற்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிக்கும் பணிகள் நடைபெற உள்ளன.

அதற்கான பயிலரங்கத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ள நிலையில், இது குறித்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், சென்னை முழுமை திட்டம் 3-ன் படி அரக்கோணம், அச்சரபாக்கம் போன்ற பகுதிகள் வரை சென்னை விரிவடைய உள்ளது.

ஆயிரக்கணக்கான ஏக்கர் புறம்போக்கு நிலங்கள் உள்ளன. அங்கு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

மாநகர் வளர்ச்சி அடையும் போது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், எதிர்கால தொழில் நுட்பம், தூய்மை போன்றவற்றை மேம்படுத்த வேண்டும். திமுக ஆட்சியில் தான் 2-வது முழுமை திட்டம் துவங்கப்பட்டது.

தற்போது மூன்றாம் கட்ட திட்டப்பணிகள் குறித்து விவாதிக்க, இந்த பயிலரங்கம் உபயோகப்படும்.

மக்கள் தொகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது அவசியம். அந்த வகையில் அரசு அதற்கான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.

சென்னை சுற்றுப்புறத்தில் உள்ள நீர் நிலைகளில் தனி கவனம் செலுத்த வேண்டும். வனத்துறை பகுதிகளில் பல ஆண்டுகளாக போடப்படாத சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் அனைத்து ஊராட்சிகளில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு இடங்களை கண்டறிந்து, அந்த பகுதிகளை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் செய்திட வேண்டும்” என்று பேசினார்.

கலை.ரா

திமுக மாவட்ட சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைப்பு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts