புதுக்கோட்டை வேங்கைவயல் கிராம குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பான வழக்கில், 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலான அளவில் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கும் அருகில் உள்ள ஆதிக்க சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, ஆதிதிராவிட மக்களுக்கு சில கட்டுப்பாடுகளை அவர்கள் விதித்துள்ளனர்.
அதில் ஒன்று, அவர்கள் கோயிலுக்குள் நுழையவும், பொது இடங்களைப் பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான் வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலர் வாந்தி, மயக்கம் மற்றும் ஒவ்வாமையால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களைப் பரிசோதித்ததில் குடிநீரில் கலப்படம் இருப்பது தெரிய வந்தது.
அதன்படி, அவ்வூர் குடிநீர் தொட்டியை ஆய்வு செய்ததில் மலம் கலந்திருப்பது தெரிய வந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கடந்த டிசம்பர் 27ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவே நேரடியாக களத்தில் இறங்கினார்.
அந்த கிராமத்துக்கு ஆய்வுக்குச் சென்ற அவருக்கு உண்மை நிலை புரிந்தது. ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கு நேரும் இன்னல்களை அடுக்கடுக்காய் ஆட்சியர் கவிதா ராமுவிடம் தெரிவித்துள்ளனர்.
அதில் முக்கியமாய் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்கிற விஷயத்தை அவரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவ்வூர் மக்களை, கையோடு அழைத்துச் சென்று கோயிலுக்குள் நுழையவைத்தார்.
அதுபோல், இரட்டைக் குவளை முறை நடைமுறையில் இருப்பது தெரிந்தும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்ததுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த விஷயத்தில், புதுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவும் கரம் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரட்டைக் குவளை, கோயிலில் அனுமதிக்காதது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலத்துடன் கழிவுநீர் கலந்தது தொடர்பாக நபர்களின் பட்டியல் எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு ஏடிஎஸ்பி தலைமையில் 6 பேர் கொண்ட ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி சரக டிஐஜி சரவணன் சுந்தர் உத்தரவின் பேரில் இந்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர், இறையூர் கிராமத்தில் தங்கியிருந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஜெ.பிரகாஷ்