காஞ்சிபுரம் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டத்திற்கு உட்பட்ட சாலவாக்கம் அடுத்த திருவந்தவாரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளி வளாகத்திற்குள் உள்ள குடிநீர் தொட்டியில் உள்ள நீரை தான் மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று (நவம்பர் 21) மதிய உணவின் போது மாணவர்கள் குடிநீருக்காக குழாயை திறந்த போது துர்நாற்றம் வீசியுள்ளது.
இது குறித்து மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து குடிநீர் தொட்டியை திறந்து பார்த்த ஆசிரியர்கள் குடிநீரில் மலம் கலந்திருப்பதாக சாலவாக்கம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காஞ்சிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர், உத்திரமேரூர் வட்டாட்சியர் ஞானவேல் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து சாலவாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது வரை இந்த வழக்கில் குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை. கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் சின்னமூப்பன்பட்டி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியின் குடிநீர் தொட்டியிலும் மாட்டு சாணம் கலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் திருவந்தவார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள், குறிப்பாக இளம் மாணவர்கள் அருந்தும் குடிநீரில் மலத்தைக் கலப்பது என்பது மனிதர்களாக பிறந்தவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத கொடுமை ஆகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு இதுவும் கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேங்கைவயல் நிகழ்வில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது தான் இத்தகைய குற்றச்செயல்கள் தொடரவும், அதிகரிக்கவும் காரணமாகியிருக்கிறது. எனவே, இனியும் தாமதிக்காமல் வேங்கைவயலில் மனிதநேயமற்ற குற்றத்தை நடத்தியவர்களை கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன்நிறுத்த தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
சேலம் மாநாட்டின் மிகப் பெரிய பலம் நேருதான்: உதயநிதி ஓப்பன் டாக்!
எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த பாஜக எம்.எல்.ஏ மருமகன்!