காய்ச்சல், தலைவலி என்றால் கசாயம் குடித்துவிட்டு உறங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்ற நிலை மாறி இப்போது வரும் காய்ச்சல்கள் உயிரையே பறிக்கும் அளவிற்கு மிகவும் மோசமானதாக உள்ளன. பெயர் தெரியாத எத்தனையோ நோய்களுக்கு மக்கள் பலியாவதை அன்றாடம் செய்திகளில் நம்மால் பார்க்க முடிகிறது.
சாதாரண காய்ச்சல்கள் எப்படி உயிர்க்கொல்லிகளாக மாறுகின்றன? என்பது குறித்தும் இன்றைய காலகட்டத்தில் உடலில் ஏற்படும் சிறு மாற்றங்களையும் கவனித்தல் எவ்வளவு முக்கியமானது? என்பது பற்றியும் சென்னையின் பிரபல மருத்துவமனைகளில் ஒன்றாக திகழும் காவிரி மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் திரு.ஜெயராமன் அவர்களுடன் உரையாடினோம். அதுகுறித்து கீழே பார்க்கலாம்.
காய்ச்சல், மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் ஏற்பட்டால் மருத்துவமனை சென்றால் சரி செய்துவிடலாம் என்று மக்கள் நம்பிக் கொண்டிருக்கும் சூழலில் மர்ம காய்ச்சல்களால் இறப்பு, டெங்கு காய்ச்சலால் இறப்பு போன்ற செய்திகள் மக்களை அச்சம் கொள்ள செய்கின்றன. இந்த நிலையின் தீவிரம் பற்றி விளக்க முடியுமா ?
உயிரிழப்பு குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. தற்போதைய சூழ்நிலையில் 99.99% காய்ச்சல்களுக்கு நம்மிடம் மருந்து உண்டு. சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் ஒன்றிரண்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அவையும் எதனால் ஏற்படுகின்றன என்னும் காரணத்தை மக்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஏற்கனவே இருதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வகை காய்ச்சல்களால் பாதிப்பு அதிகம் உண்டு. அவர்களுக்கே உயிரிழப்பும் ஏற்படுகின்றன. இதை தடுக்க வேண்டும் எனில் மக்கள் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரை அணுக வேண்டும்.
டெங்கு காய்ச்சல் குறிப்பாக உடலின் எந்த உறுப்பை பாதிக்கும்?
டெங்கு என்பது ஒரு வகை வைரஸ் தொற்று. இது குறிப்பாக ஒரு உறுப்பு என்று இல்லாமல் உடலில் உள்ள எல்லா செல்களையும் தாக்கக்கூடியது. என்றாலும் அது குறித்து நாம் பயப்பட தேவையில்லை. டெங்கு என்பது முற்றிலும் குணப்படுத்தக்கூடிய ஒரு காய்ச்சல் தான். காய்ச்சல் வந்தவுடன் மக்கள் அதிகம் தண்ணீர் குடிப்பதை விட்டு விடுகின்றனர்.
எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு தண்ணீர் குடித்தால் நோயிலிருந்து சுலபமாக நம்மால் மீண்டு வர முடியும். தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, உடல் வலி இப்படி எந்த அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகினால் சுலபமாக டெங்குவிலிருந்து நம்மால் மீண்டு வர முடியும்.
டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு அரசு வீடுகளின் முன் இருக்கக்கூடிய பிளாஸ்டிக் குப்பைகள், டயர் வேஸ்ட் போன்றவற்றை சுத்தம் செய்தல், கொசு மருந்து அடித்தல் என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கின்றது. இவற்றை தாண்டி ஒரு தனி மனிதனாக நம்மை பாதுகாக்க நாம் என்னென்ன முன்னேற்பாடுகள் செய்துகொள்ள வேண்டும்?
காலையில் இருந்து இரவு வரை நாம் அன்றாடம் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம். எல்லா இடங்களும் கொசு இல்லாமல் சுத்தமாக இருக்கிறதா? என்பது சந்தேகம்தான். அதனால் நம்முடைய உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ள நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும். செழிப்பான உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் நோயை எதிர்த்து போராட நம்முடைய உடலுக்கு தெம்பு கிடைக்கும்.
தற்போதைய தலைமுறைக்கு நோயெதிர்ப்பு ஆற்றல் மிகவும் குறைந்து வருவதாக கூறுகிறார்கள். இதற்கு காரணம் என்ன? நோய்களை தடுக்க என்ன வகையான உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் ?
சென்ற தலைமுறைக்கும், இந்த தலைமுறைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியில் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால் உணவு பழக்கங்களிலும், உடற்பயிற்சியிலும் வேறுபாடுகள் உள்ளது. பொதுவாக பழங்கள், ஆரோக்கியமான புரதச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொண்டாலே நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
உடலில் ஏதேனும் அசௌகரியம் ஏற்படும் போது மக்கள் உடனடியாக அருகில் உள்ள மருந்து கடைகளில் டோலோ, பாராசிட்டமால் போன்ற மாத்திரைகளை வாங்கி உட்கொள்கின்றனர். இதில் உள்ள ஆபத்துகள் என்ன ?
எந்த காரணத்திற்காக காய்ச்சல் வருகிறது என்ற அறியாமலேயே காய்ச்சல் வந்தவுடன் மாத்திரைகளை உட்கொள்வது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. மருத்துவரிடம் செல்லாமல், என்ன நோய் என்று அறியாமல் மாத்திரைகளை உட்கொள்வது எங்கு செல்கிறோம் என்றே தெரியாமல் பேருந்தில் ஏறி பயணம் செய்வதை போன்றது. எந்த நோயாக இருந்தாலும் அதனை கண்டறிதல் மிகவும் முக்கியமானது. அப்படி கண்டுபிடித்த பிறகு சுலபமாக சிகிச்சைகளை மேற்கொண்டு நம்மால் அந்த நோயிலிருந்து எளிதில் மீண்டு வர முடியும்.
மேலும் காய்ச்சல் வந்தால் ஏன் மருத்துவரை பார்க்க வேண்டும்? என்பது கூட மக்களுடைய பொதுவான கேள்வியாக இருக்கிறது. எல்லா காய்ச்சல்களுமே சாதாரண காய்ச்சலாக தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அது ஒரு கொடிய நோயின் ஆரம்ப அறிகுறியாக கூட இருக்கலாம்.
மருத்துவரை அணுகி அவர் கொடுக்கும் பரிசோதனைகளை செய்து பார்த்தால் தான் அது சாதாரண காய்ச்சலா? இல்லை ஏதேனும் நோய் அறிகுறியா? என்பது நமக்கு தெரிய வரும். ஆகவே சாதாரண காய்ச்சல் என்று விடாமல் காய்ச்சல் வந்த உடன் அதன் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரை அணுகுவது நம்மை பெரும்பான்மையான நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
இதுபோன்ற பல கேள்விகளுக்கு மருத்துவர் திரு.ஜெயராமன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அதுகுறித்து மேலும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நேர்காணல்: தமிழ் முல்லை
தொகுப்பு: சண்முக பிரியா
IPL2024: மீண்டும் தாய் கழகத்திற்கு திரும்பும் ஹர்திக்… ரோஹித்தின் நிலை என்ன?
காந்தாரா 2 ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்!