சண்டே ஸ்பெஷல்: அடிக்கடி ஏப்பம் விடுபவரா நீங்கள்… தீர்வு என்ன?
சிலருக்கு சாப்பிட்டதும் மட்டுமல்ல… சாப்பிடுவதற்கு முன்பும் பெரிய சத்தத்துடன் ஏப்பம் வந்துகொண்டே இருக்கும். பொது இடத்தில் இது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். இதற்கு என்ன காரணம்… தீர்வு என்ன?
“ஏப்பம் என்பது எல்லா வயதினரும் சந்திக்கிற பிரச்சினைதான். சாப்பிடும்போது அதிக அளவிலான காற்றையும் சேர்த்து விழுங்குவதால்தான் இப்படி வருகிறது. ‘இத்தனை காலமாக அப்படியெல்லாம் இல்லையே… திடீரென இந்தப் பிரச்னை ஏன் வர வேண்டும்?’ என்று சிலர் கேட்கலாம். உடலானது உள்ளே போன அதிகப்படியான காற்றை வெளியேற்ற முயலும்.
தண்ணீர் குடிக்கும்போது கடகடவென வேகமாகக் குடிப்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஸ்ட்ரா உபயோகித்துக் குடிக்கும் வழக்கம் அதிகமுள்ளோருக்கும் ஏப்பம் பெரும் பிரச்னையாக இருக்கலாம்.
சோமா போன்ற கார்பனேட்டடு பானங்களைக் குடிக்கும்போது அவற்றின் மூலம் அதிக காற்று உள்ளே போக வாய்ப்பு உண்டு. அதனாலும் ஏப்பம் வரலாம்.
சோடாவோ, ஏரியேட்டடு பானங்களோ குடிக்கிற வழக்கமே இல்லை, ஆனாலும் ஏன் இந்தப் பிரச்சினை வர வேண்டும் என்று சிலர் கேட்கலாம். சிலருக்கு நடுத்தர வயது அல்லது அதற்குப் பிறகுதான் ‘லாக்டோஸ் இன்டாலரென்ஸ்’ எனப்படும் பால் ஒவ்வாமை ஏற்படும்.
அப்படிப்பட்டவர்கள் இரவு உணவுக்கு பனீர் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட்டாலோ, இரவு உணவுக்குப் பிறகு பால் குடித்தாலோ, லாக்டோஸ் இன்டாலரென்ஸ் காரணமாக ஏப்பம் வரலாம்.
அடுத்தது ‘ஆசிட் ரெஃப்ளெக்ஸ்’ எனப்படும் நெஞ்செரிச்சல் பிரச்சினை. நெஞ்செரிச்சல் பிரச்சினையை நேரடியாக உணர மாட்டார்கள். ஆனால், அதன் விளைவாக புளித்த ஏப்பம் மட்டும் வரலாம்.
பச்சைக் காய்கறிகள் சாப்பிடுவது நல்லதுதான்… ஆனால், அதற்காக அதிக அளவில் வெள்ளரிக்காய், தக்காளி போன்றவற்றை பெரிதாக வெட்டிச் சாப்பிடுவது, அதன் செரிமானத்தை தாமதமாக்கி, ஏப்பமாக வெளிப்படுத்தலாம்.
எந்த உணவையும் நன்கு மென்று விழுங்குவதுதான் இதற்கான முதல் தீர்வு. ஃப்ரெஷ்ஷான எலுமிச்சம் பழச்சாற்றில் சில துளிகளை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து அப்படியே குடிப்பது தீர்வளிக்கும். வெறும் எலுமிச்சைப் பழச்சாறு மட்டும் பிடிக்காதவர்கள், சிறிது ஆரஞ்சுச் சாறும் கலந்து குடிக்கலாம்.
‘நெஞ்செரிச்சலால் ஏப்பம் வரும் என்கிறீர்கள்…. எலுமிச்சை, ஆரஞ்சுச் சாறெல்லாம் குடிக்கச் சொல்கிறீர்களே…’ என்று கேட்பவர்கள், இதை முயற்சி செய்து பார்த்தால் அது தரும் நிவாரணத்தை உணர்வார்கள்.
இப்படிக் குடிக்கும்போது பெரும்பாலும் உப்போ, சர்க்கரையோ சேர்க்காமல் இருப்பதுதான் சிறந்தது. அப்படிக் குடிக்கவே முடியாது என்பவர்கள் ஒரு சிட்டிகை மட்டும் உப்பு சேர்த்துக் குடிக்கலாம்.
பகல் நேரத்தில், பொது இடத்தில் இந்தப் பிரச்னை தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது என்று நினைப்பவர்கள் சிறிது தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சோம்பும் துருவிய இஞ்சி சிறிதும் சேர்த்துக் கொதிக்கவைத்து பகல் வேளையில் இரு முறை குடிக்கலாம். இது அதிகபட்சமாக 50 முதல் 75 மில்லியை தாண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
இப்படியெல்லாம் செய்தும் உங்கள் பிரச்சினை தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவதே சிறந்தது” என்கிறார்கள் கிளினிகல் டயட்டீஷியன்ஸ்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சோயா உருண்டை மசாலா