கடும் எதிர்ப்பையடுத்து கியூட் நுழைவுத்தேர்வு எழுத லட்சத்தீவில் மையம் ஒதுக்கப்பட்ட மாணவருக்கு தேர்வு மையம் மதுரைக்கு மாற்றி தரப்பட்டு இருக்கிறது.
மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான கியூட் எனப்படும் நுழைவு தேர்வு செப்டம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மதுரையைச் சேர்ந்த மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது.
இதனால் அந்த மாணவரும் அவரது பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல்கள் தெரிய வந்ததையடுத்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்,
கண்டனம் தெரிவித்து தொடர்புடைய துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார்.
அதில் தமிழ்நாட்டில் இருப்பது ஒரு மத்திய பல்கலைக் கழகம். அது திருவாரூரில் அமைந்துள்ளது.
அதற்கு விண்ணப்பித்த மாணவர் ஒருவருக்கு தேர்வு மையத்திற்கான அனுமதி சீட்டு இரண்டு நாட்களுக்கு முன்புதான் வந்துள்ளது. அவர் மதுரையை சேர்ந்தவர்.
அந்த அனுமதி சீட்டை பிரித்துப் பார்த்த அவரது தந்தைக்கு அதிர்ச்சி. காரணம் தேர்வு மையம் லட்சத் தீவில் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாணவர் அங்கு எப்படி போவார். இப்படி ஒரு வாரம் கூட அவகாசம் தராமல் பயணத்திற்கு டிக்கெட் வாங்குவது என்றால் எவ்வளவு செலவு ஆகும்.
அத்துடன் ஒரு நாள் முன்பாகவே வந்து மையத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அனுமதிச் சீட்டோடு, அறிவுரை சீட்டில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இது போன்ற மாணவர்களுக்கு தேர்வு மையத்தை மாற்றுங்கள்.” நுழைவுத் தேர்வெழுத அலைகடல் தாண்டி பயணப்பட வேண்டுமா?,
தேர்ச்சி பெறுவதை விடக் கடினம் தேர்வு மையத்தை சென்று சேர்வது என்ற நிலையை உருவாக்காதீர்கள் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்தநிலையில் அந்த மாணவருக்கு தேர்வு மையம் மதுரையிலேயே ஒதுக்கப்பட்டுவிட்டதாக எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், “மதுரை – மேலூர் மாணவர் லோகேஷ்வருக்கு நீதி கிடைத்தது.
தேர்வு மையம் லட்சத்தீவிலிருந்து மதுரைக்கு மாற்ற உத்தரவு. தேசிய தேர்வு முகமையின்(NTA) ஒருங்கிணைப்பாளருக்கும், திருவாரூர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் எனது நன்றி. மாணவருக்கு வாழ்த்துகள்” என்று சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.
கலை.ரா
அனைத்து ரயில்களையும் சாதாரண கட்டணத்தில் இயக்க கோரிக்கை!