நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் சொத்து விற்பனையை பதிவு செய்யலாம் என்ற பத்திரப்பதிவுத் துறையின் புதிய உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் சாமானிய மக்களும் துணிந்து முதலீடு செய்வதற்கு தங்கமும் நிலமும் உள்ளது. அதனால் தான் இன்று தங்கத்தின் விலையும், நிலத்தின் மதிப்பும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
அதுமட்டுமின்றி நிலத்திற்கான அதிகப்பட்ச பதிவுக்கட்டணத்தை 10,000 ரூபாயாகவும், முத்திரைத்தாள் கட்டணத்தை 40,000 ரூபாயாகவும் கடந்த ஆண்டு பத்திரப் பதிவுத்துறை உயர்த்தியது. இதே போல தங்களது நிலத்திற்கு மற்றவர்களுக்கு அதிகாரம் கொடுக்கும் பவர் ஆப் அட்டார்னி பதிவு கட்டணம் மற்றும் தனி மனை பதிவிற்கான கட்டணமும் அதிகரிக்கப்பட்டது. இதனால் பத்திரப் பதிவு செய்யும் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், நீதிமன்றத்தில் சொத்து தொடர்பாக தடை ஆணை இல்லாத நிலையில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் அந்த சொத்து விற்பனையை பதிவு செய்யலாம் என்ற புதிய உத்தரவை பத்திரப் பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
இதற்கு காரணமாக, பத்திர பதிவு செய்ய வரும் சொத்துக்களை நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்பதை காரணம் காட்டி பத்திரங்களை திருப்பி அனுப்பவதால் ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த உத்தரவால் போலி பத்திரம் என்று தெரியாமல் நிலம் வாங்குபவர்கள் கடும் சிரமத்தை சந்திக்க நேரிடும் என ரியல் எஸ்டேட் அதிபர்கள் முதல் பொதுமக்கள் வரை பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக ஒருவர் நிலம் வாங்கும் போது அந்த நிலத்தின் ஒரிஜனல் பத்திரம், இசி, மற்றும் வில்லங்க சான்று போன்றவற்றை பார்ப்பதோடு அந்த நிலத்தின் மீது ஏதேனும் வழக்கு உள்ளதா என ஆராய்வார்கள். வழக்கு இல்லையென்றால் நிலத்தை பதிவு செய்ய முன்வருவார்கள். இல்லையென்றால் மறுத்துவிடுவார்கள்.
ஆனால் தற்போது வழக்கு நிலுவையில் இருந்தாலும் பத்திர பதிவு செய்யலாம் என்ற உத்தரவால் நிலம் வாங்குபவர்களும், நிலம் வாங்குபவர்களுக்கு கடன் கொடுப்பவர்களும் கடுமையாக பாதிப்படைய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
இதுகுறித்து ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர்கள் தரப்பில் கூறுகையில், “சொத்து வாங்கும் மக்களுக்கு எந்த வித தடையும் ஏற்படாத வகையில் பத்திர பதிவுத்துறையால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவு மோசடி பேர்வழிகளுக்கு கம்பளம் விரிக்கிறது என்பது தான் உண்மை. இதனை பத்திரபதிவு துறை சரியாக ஆராயாமல் ஒப்புதல் கொடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
சொத்து தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதை விற்பதற்கு என வரும் பத்திரங்களை சார் பதிவாளர்கள் பதிவு செய்ய மறுத்து திருப்பி அனுப்புவது வழக்கம். ஆனால் இந்த புதிய உத்தரவால் போலி பத்திரம் தயார் செய்து சாமானிய மக்களை எளிதாக ஏமாற்ற முடியும்.
உதாரணமாக, பிரச்னையில் உள்ள ஒரு நிலத்தை விற்பனை செய்ய தடை இல்லாத போது ஒருவர் வாங்குகிறார். ஆனால் பத்திர பதிவு செய்யப்பட்ட பின்னர் நிலத்திற்கு தடை விதிக்கப்பட்டால் அந்த சாமானியரும், அந்த நிலத்திற்கு கடன் கொடுத்த வங்கியும் நீதிமன்றத்திற்கு அலைய வேண்டிய நிலை உருவாகும். எனவே இந்த புதிய திட்டத்தை நன்கு ஆலோசித்து மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்” என தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நிலவில் அணு மின் நிலையம் … ரஷ்யாவுடன் சீனா, இந்தியா கைகோர்ப்பு!
விசிக மாநாட்டுக்கு அதிமுகவுக்கு அழைப்பு : உதயநிதி ரியாக்ஷன்!