”யூடியுபர் இர்பான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை துண்டித்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்டோபர் 22) தெரிவித்துள்ளார்.
பிரபல யூடியூபர் இர்பான் தனது மனைவியின் பிரசவத்தின்போது தொப்புள் கொடியை அவரே கத்திரிக்கோலால் துண்டித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக இர்பான் மற்றும் மருத்துவர் நிவேதிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரசவம் பார்க்கப்பட்ட தனியார் மருத்துவமனையிலும் தமிழக சுகாதாரத்துறை இயக்குநர் இளங்கோவன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “யூடிபர் இர்பான் கடந்த மே மாதம் துபாய்க்கு சென்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் அறிந்துகொண்டு, இங்கு வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்த தகவலின் பேரில் டிஎம்எஸ் சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு மன்னிப்பு கேட்டு, இனிமேல் இதுபோல் செய்யமாட்டேன் என்று உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில் தான் தனது மனைவியின் பிரசவத்தின்போது தொப்புள் கொடியை அவரே கத்திரிக்கோலால் துண்டித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இது கண்டிக்கக்கூடிய விஷயம்.
மருத்துவரல்லாத ஒருவர் அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்று தொப்புள் கொடியை அறுத்திருப்பது என்பது தேசிய மருத்துவ கமிஷன் சட்டம் 2021 பிரிவு 34க்கு எதிரானது.
எனவே இர்பான் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அதோடு இர்பான் மற்றும் பெண் மருத்துவர் நிவேதிதா மீதும் செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் டிஎம்எஸ் சார்பில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் நிவேதிதா மீது தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிலும் மருத்துவப்பணி செய்வதற்கு தடை விதிக்க கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
தொப்புள் கொடி விவகாரத்தில் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம்” என மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
90 களில் நாட்டை உலுக்கிய நாவுக்கரசு கொலை வழக்கு… கொலையாளி ஜான் டேவிட்டுக்கு ஜாமீன்!
தீபாவளிக்கு மக்கள் தங்கம் வாங்குவார்களா? இன்றைய நிலவரம் என்ன?