களையிழந்து காணப்படும் ஈரோடு மஞ்சள் மார்க்கெட்: காரணம் என்ன?

தமிழகம்

ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டில் தேவைக்கு ஏற்ற வர்த்தகம் மட்டுமே நடைபெற்று வருவதால் களையிழந்து காணப்படுகிறது. இதனால், மஞ்சளின் விற்பனை மற்றும் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கம் ஆகிய நான்கு இடங்களில் ஏலம் மூலம் மஞ்சள் விற்பனை நடந்து வருகிறது.

வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை நடக்கும் இந்த ஏலத்தில், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் பங்கேற்று மஞ்சள் விற்பனை மற்றும் கொள்முதல் செய்து வருகின்றனர்.

ஈரோடு மஞ்சள் சந்தையில், இந்த ஆண்டு தொடக்கம் முதல் புதிய மஞ்சளுக்கு அதிக விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி உட்சபட்சமாக ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.21,369-க்கு விற்பனையானது. அதன்பின், மஞ்சள் விலை படிப்படியாக குறைந்து வந்துள்ளது.

நேற்றைய மஞ்சள் சந்தையில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.15,678-க்கு விற்பனையானது. குறைந்தபட்ச விலை குவிண்டால் ரூ.8,569 ஆக சரிந்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி,

“பொதுவாக நாடு முழுவதும் மஞ்சள் பயன்பாடு குறைந்துள்ளது. இதனால், தேவையான அளவு மட்டும் வியாபாரிகள் மஞ்சள் கொள்முதல் செய்கின்றனர். இதனால், ஈரோடு மஞ்சள் சந்தை உட்பட அனைத்து சந்தையிலும் வர்த்தகம் குறைவும், விலையில் சரிவும் ஏற்பட்டுள்ளது.

தீபாவளி, ஆயுதபூஜை என விழாக்காலங்கள் தொடங்கி, மஞ்சள் பயன்பாடு அதிகரித்தால் மட்டுமே விலை உயர வாய்ப்புள்ளது. அது வரையில், தற்போதைய விலையில் இருந்து ரூ.2,000 வரை ஏற்ற இறக்கங்களுடன் இருக்க வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டு மழைப்பொழிவு நன்றாக இருந்ததால், மஞ்சள் பயிரிடும் பரப்பு அதிகரித்துள்ளது. இதனால், வரும் ஆண்டு மஞ்சள் வரத்து அதிகமாகும் வாய்ப்பு உள்ளது.

மேலும், வெளிநாடுகளுக்கு மஞ்சள் ஏற்றுமதி செய்வது 20 சதவிகிதம் குறைந்துள்ளதும் மஞ்சள் மார்க்கெட் களையிழந்து காணப்படுவதற்கு முக்கிய காரணமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ்: விக்கிரவாண்டி வாக்குப்பதிவு முதல் அதிமுக ஆலோசனை வரை!

கிச்சன் கீர்த்தனா: கேஷு தம் புலாவ்

பகுஜன் சமாஜ் தலைவர் ஆகிறாரா பா.ரஞ்சித்?

‘செல்வப்பெருந்தகை என்ன மகாத்மாவா’… ‘அரைகுறை அண்ணாமலை’… முற்றும் வார்த்தைப் போர்!

+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *