16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில், 4 மருத்துவமனைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டையைப் பெற்று விற்பனை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாகச் சிறுமியின் தாய் சுமையா, அவரின் இரண்டாவது கணவர் சையத் அலி, இடைத்தரகராகச் செயல்பட்ட மாலதி மற்றும் சிறுமியின் வயதைக் கூடுதலாக ஆவணங்களில் மாற்றிய ஜான் உட்பட 4 பேரை கைது செய்து ஈரோடு போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து விசாரிக்கத் தமிழக அரசு சார்பில் மருத்துவ பணிகள் இயக்குனரக இணை இயக்குனர் விஸ்வநாதன் தலைமையிலான 5 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டது.
அதன்படி சிறுமியின் கருமுட்டையைப் பெற்றதாகத் திருவனந்தபுரம், திருப்பதி, சேலம், ஓசூர், திருச்சி போன்ற இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதுதொடர்பான அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில் மருத்துக் குழுவின் விரிவான விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை, தேனாம்பேட்டையில் இன்று (ஜூலை 14) செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சிறுமியின் கருமுட்டையை 2 ஆண்டுகளில் பலமுறை எடுத்துப் பெற்றோர்களே விற்பனை செய்திருக்கிறார்கள். 21 முதல் 35 வரையுள்ள ஒரு குழந்தை பெற்ற பெண்ணிடம் ஒருமுறை மட்டும் தான் கருமுட்டை பெற வேண்டும் என்பது விதி. ஆனால் சம்பந்தப்பட்ட சிறுமியிடம் சாதக, பாதகங்களை விளக்காமல், அவரை துன்புறுத்தி பலமுறை பெறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அதிர்ச்சியாக இருக்கிறது. சிறுமியின் உண்மையான பெயர், வயதை மறைத்து கருமுட்டை பெறப்பட்டுள்ளது.
மேலும் அடையாளத்திற்காக 16 வயது சிறுமியை 21 வயது என போலி ஆதார் அட்டை தயாரித்துள்ளனர். போலியான ஆதார் அட்டை என தெரிந்தும் மருத்துவமனைகள் அதனைப் பயன்படுத்தி உள்ளது. கருமுட்டை தானம் பெற போலியான கணவரிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த குற்றச்செயலில், தமிழகத்தில் 4 மருத்துவமனைகளும், ஆந்திரா, கேரளாவில் தலா ஒன்று என 6 மருத்துவமனைகள் ஈடுப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் விசாரணை அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் கொடுக்கவில்லை. இருப்பினும் மருத்துவ குழுவினரின் தீவிர விசாரணை அறிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் அவர், “கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஈரோடு, சேலம், ஓசூர் மற்றும் பெருந்துறையில் உள்ள மருத்துவமனைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 4 மருத்துவமனைகளும் அடுத்த 15 நாட்களுக்குள் உள்நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும். உடனடி நடவடிக்கையாக 4 மருத்துவமனைகளின் ஸ்கேன் செண்டர்களும் மூடப்படும். முதலமைச்சரின் காப்பீடுகளுக்கான உரிமைகள் ரத்து செய்யப்படும். வெளிமாநிலங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி துறை செயலாளர் மூலம் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்குப் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
– கிறிஸ்டோபர் ஜெமா