erode arts and science college climate change national seminar
மத்திய அரசின் நிதி உதவியுடன் நடைபெறும் தேசிய கருத்தரங்கில் முதல் முதலாக தாய்மொழியில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்க அழைப்பு. ஆய்வுக் கட்டுரைகளை புத்தகமாக வெளிடவும் திட்டம்.
புவி கோளத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி!
காலநிலை மாற்றம், புவிக் கோளத்தை சூழ்ந்துள்ள மாபெரும் பெரிய நெருக்கடி என்பதை, ஆங்காங்கே பெருக்கெடுக்கும் வெள்ளம், புயல், அதீத மழை, வெப்பம் எடுத்துக் காட்டுகிறது.
மனிதகுலம் இதுவரை சந்திக்காத, மனிதகுலத்தால் உருவாக்கப்பட்ட பெரும் நெருக்கடி என்பதை சேர்த்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும். நிச்சயமாக காலநிலை மாற்றத்தால் உந்தப்பட்ட இந்தப் புவிக் கோளத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நம் எதிர்காலத்தை மாற்றி அமைக்கவிருக்கிறது.
அது எப்படி இருக்கும் என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாத பெரும் புதிராகவும் பெரும் அச்சமாகவும் இருக்கிறது. நிலக்கரி மற்றும் பெட்ரோலிய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பல இலட்சம் கோடி கொட்டிக் கொடுத்து, விஞ்ஞானிகளையும் விலைக்கு வாங்கி, அகில உலக அரசியல் செய்து, இது “காலநிலை மாற்றமே இல்லை” என்று கற்பிதம் செய்யப் பார்க்கிறது.
மூடி மறைக்கவே முடியாத அளவுக்கு கொதி நிலையை எட்டிவிட்டது. எழுபதுகளில் லேசாக கண்டு கொள்ளத் தொடங்கி, தற்போது இந்தப் புவிக் கோள நெருக்கடிக்கு தீர்வு கண்டே ஆக வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளோம்.
அனைவரும் இணைய வேண்டிய நேரமிது!
காலநிலை மாற்றத்தின் விளைவுகளை கணிப்பதோ, அதனை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை திட்டமிடுவதோ அவ்வளவு எளிதான பணி அல்ல.
ஒரேயொரு துறை சார்ந்த விஞ்ஞானிகள் வல்லுனர்கள் செய்யும் பணியல்ல. இதில் கலை, இலக்கியம்,அரசியல், பண்பாடு, கலாச்சாரம், அறிவியல், தொழில்நுட்பம், சமூகவியல், பொருளாதாரம் வரலாறு என எல்லாத் துறை வல்லுநர்களும் இணைய வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம்.
மக்களும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை. குடும்பங்கள் முதல் உலகில் அனைவரும், கிராம சபை முதல் ஐக்கிய நாடுகள் சபை வரையிலும் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டிய தருணம். புவிக் கோளத்தை காக்க வேண்டிய தருணம்.
இதற்காக பல வடிவங்களில் செயலாற்ற வேண்டும். இத்தகைய தருணத்தில் ஈரோடு கலை அறிவியல் கல்லூரி பொருளியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர், மின்னம்பலம் கட்டுரையாளர் மணி மத்திய அரசு இந்திய சமூக விஞ்ஞான கழகத்தின் நிதியுதவியோடு, ஒரு தேசிய கருத்தரங்கம் ஏற்பாடு செய்துள்ளார். அதன் தலைப்பு ” காலநிலை மாற்றத்தின் விளைவுகள், காரணங்கள், அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் இந்தியாவின் இலக்குகள்” என்பதாகும்.
எழுத்துக்களை அங்கீகரிக்க புதிய முயற்சி!
தமிழ் நாட்டில் காலநிலை மாற்றம் பற்றி கவலை கொள்வோர் படிப்போர் எழுதுவோர் செயற்பாட்டாளர்கள் நிறைய இருக்கிறார்கள். பல்வேறு தளங்களில் பல்வேறு வடிவங்களில் பணியாற்றி வருகின்றனர்.
அதில் தமிழ் ஆங்கிலம் இரண்டும் அறிந்து தமிழ் சமூகத்திற்காக தமிழில் எழுதுவோர், செயல்படுவோர் உண்டு. ஆங்கிலத்தில் கற்று தெளிந்து தமிழ் வழியில் தொண்டாற்றுவோர் உண்டு.
தமிழில் கற்றுக் கொண்டு எழுதுவோர் செயல்படுவோர் உண்டு. இவர்கள் பணிகளை தேசிய கருத்தரங்கங்கள் அங்கீகரிக்க வேண்டும். அதில் இவர்களும் பங்கு பெற வேண்டும். இவர்கள் எழுத்துக்கள் ஆய்வுகள் கருத்துக்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று தமிழ் நாட்டில் முதல் முயற்சியை கருத்தரங்க அமைப்பாளர் பேராசிரியர் மணி ஓர் தனித்துவமான ஏற்பாட்டை செய்துள்ளார்.
அந்த சிறப்பு ஏற்பாட்டின் அடிப்படையில், தமிழில் சமர்பிக்கப்படும் ஆய்வுகளும் கருத்தரங்கிற்கு பதிவு செய்யப்படலாம்.
பதிவு செய்யப்படும் கட்டுரைகள் கருத்தரங்க ஒருங்கிணைப்பு குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அதனை தேசிய கருத்தரங்கில் சமர்பிக்கலாம். அதன் ஆய்வு சுருக்கம் கருத்தரங்க ஒருங்கிணைப்பு குழுவால் ஆங்கிலத்தில் சுருக்கம் தயார் செய்யப்பட்டு இந்திய சமூக விஞ்ஞான கழகத்திற்கு சமர்பிக்கப்படும். அது, தமிழில் தனி நூலாகவும் வெளியிடப்படும்.
கருத்தரங்கம் பற்றிய விரிவான தகவல்கள், பதிவு, இதர விபரங்கள் அடங்கிய கருத்தரங்க விளக்கக் குறிப்பு, பதிவு படிவம் உள்ளிட்டவை இத்தோடு இணைக்கப்பட்ட கூகுள் படிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது. பங்கு பெற விரும்புவோர் இதனை பயன்படுத்திக் கொள்ளவும் தேவைப்படுவோருடன் பகிர்ந்து கொள்ளவும் கேட்டுக் கொள்கிறோம்.
காலநிலை மாற்றம் மீதான தேசிய கருத்தரங்க விளக்கக் குறிப்பு மற்றும் பதிவு படிவம்.
https://forms.gle/6tEobtQkZcJy1iTn6
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: ரைஸ் டிக்கியா வித் சாஸ்
வேலைவாய்ப்பு : யுஐஐசி-யில் பணி!
erode arts and science college climate change national seminar