“தனித்துவம் வாய்ந்த கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டுமென்றால் அது மக்களுக்கானதாக இருக்க வேண்டும். அதுதான் சமத்துவத்தை உருவாக்கும்” என்று பேராசிரியர் ஜவஹர் நேசன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் உள்ள தனியார் விடுதியொன்றில் தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக ‘தமிழ்நாடு கல்விக்கொள்கை எதிர்கொள்ளும் சவால்கள்’ என்ற தலைப்பில் மாநில கல்விக் கொள்கைக்குழுவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜவஹர் நேசன் இன்று (மே 28) உரையாற்றினார்.
அவர் பேசியதாவது: ‘பல நாடுகள் மற்றும் பல கல்வி அமைப்புகளில் பணியாற்றியபோதும்கூட கடந்த 25 ஆண்டுகளாக மக்களோடு இணைந்த தொடர்பு மற்றும் களப்பணியில்தான் இருந்து வந்தேன்.
கடந்த ஓராண்டாக மாநில கல்விக் கொள்கை வகுக்கும் பணியில் என்னை இணைத்துக் கொண்டு செயலாற்றினேன். இதனால் மக்களுடனான எனது நேரடித் தொடர்பு இல்லாமலிருந்தது. தற்போது மீண்டும் அதற்கான காலம் உருவாகியிருப்பதை மகிழ்ச்சியோடு எதிர்கொள்கிறேன்.
மாநில கல்விக் கொள்கைக்கான உயர்மட்டக்குழுவில் தமிழ்நாடு அரசு என்னை உறுப்பினராக்கி அறிவித்தபோது பெரிதும் மகிழ்ந்தேன். வணிக மயம், சாதி, மதம் சார்ந்த கல்வி முறைகள்தான் கடந்த 75 ஆண்டுகளாக சுதந்திர இந்தியாவில் இருந்து வருகிறது.
தற்போது மூன்று அங்கங்கள் இந்தக் கல்வி முறையைத் தீர்மானிக்கும் காரணிகளாக வளர்ந்துள்ளன. சந்தை, அதிகாரம், அரசு ஆகியவையே அந்த அங்கங்கள். இதனைத் தாண்டி தங்களின் கல்வி முறையைச் செயல்படுத்துகின்ற நாடுகள் வெகு குறைவே. இந்த மூன்றின் கூட்டணிதான் இந்தியாவில் கல்வியைத் தீர்மானிக்கும் ஆற்றல்களாக உள்ளன.
இங்கு கல்வி என்பது விமர்சனப்பூர்வமாக, வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பதற்குத் தேவையான ஆசிரியர்கள், கட்டமைப்புகள், பயிற்சிகள் அனைத்தும் அவசியம். அதுபோன்ற கல்வி சார்ந்த சூழல் அமைவு என்பதை உருவாக்கினால் மட்டுமே மக்களுக்கான கல்விக் கொள்கை சாத்தியமாகும்.
ஒரு கருத்தை உள்வாங்குவதில் சகிப்புத்தன்மை இல்லையென்றால் எவ்வாறு இங்கே சிந்தனையாளர்கள் உருவாக முடியும்..? அந்த சகிப்புத்தன்மை என்பது ஜனநாயகத்தின் ஒரு கோட்பாடு.
சமத்துவம் இருந்தால்தான் சகிப்புத்தன்மை வளரும். நீயும் நானும் சமம் என்ற நிலை இருக்கும்போதுதான் அறிவை உள்வாங்குவதும், வெளிப்படுத்துவதும் இயலும். அதன்பால் உள்ள உண்மையை விமர்சனப்பூர்வமாக உணரும்போதுதான் புதிய அறிவை வெளிப்படுத்த முடியும்.
அதற்குதான் நல்ல அரசும், கூடி வாழும் தன்மையும் தேவை. ஆனால் அதற்கு மாறான நிலையே உள்ளது. கடந்த 75 ஆண்டுகளாக இந்தக் கல்விக்கூடங்கள் என்ன செய்தன?” என்றார்.
கல்வியாளர் பிரபா கல்விமணி பேசுகையில், ‘கல்விக் கொள்கையில் பயிற்று மொழியாக தாய்மொழிக் கல்வியான தமிழ் என்பது மிகவும் அவசியம். ஆங்கிலத்தில் கற்பது கௌரவமாகவும் தமிழில் கற்பதை கேவலமாகவும் பார்க்கின்ற மனநிலையை மாற்ற வேண்டும்.
தொடக்கக்கல்வியில் இரு மொழிகள் என்ற நிலை உலக நாடுகளில் எங்கும் கிடையாது. 2-ஆவது மொழியை 8 அல்லது 10 வயதில்தான் அறிமுகப்படுத்துகிறார்கள். ஆனால் இங்கு அப்படியில்லை. ஆகையால் பயிற்றுமொழியை முதன்மையான சிக்கலாக கல்விக் கொள்கை வகுப்போர் கருத வேண்டும்” என்றார்.
முன்னதாக பேராசிரியர் ஜவஹர் நேசன் எழுதிய ‘தமிழ்நாட்டிற்கான தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்குதல்’ என்ற நூல் வெளியிடப்பட்டது.
மேலும் மாநிலக் கல்விக் கொள்கை குறித்து பரவலாக அனைத்துத்தரப்பு மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் கொண்ட புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க இக்கருத்தரங்கில் தீர்மானிக்கப்பட்டது.
’சென்னை அணி தான் சாம்பியன்’: காரணம் பகிர்ந்த கவாஸ்கர்
சென்னை உயர்நீதிமன்றத்தின் 33வது தலைமை நீதிபதி பதவியேற்பு!