ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு கேளிக்கை வரி:  சென்னை மாநகராட்சி நோட்டீஸ்! 

தமிழகம்

செப்டம்பர் 10 ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியை மையமாக வைத்து சர்ச்சை மேல் சர்ச்சை தொடர்கிறது.  தாம்பரம் மாநகர காவல் துறையும் இந்த சர்ச்சையில் சிக்கிய நிலையில், இப்போது அடுத்த பரபரப்பு சென்னை மாநகராட்சியிடம் இருந்து புறப்பட்டுள்ளது.

அன்று சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள், மற்ற வசதிகள் செய்யாததால் பல்லாயிரம் பேர் டிக்கெட் எடுத்தும் நிகழ்ச்சியை காண முடியாமல் நெரிசலில் சிக்கிக் கொண்டனர்.  உயிர் தப்பித்தால் போதும் என்று பலர் வெளியேறி சமூக வலைத்தளங்களில் தங்கள் அதிருப்தியை பகிர்ந்துகொண்டனர்.  ஒட்டுமொத்த குளறுபடிகளுக்கும் நானே பொறுப்பு என்று ரகுமான் அறிவிக்க… அதையடுத்து இந்த நிகழ்ச்சியை நடத்திய ஏசிடிசி ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியது.

இதற்கிடையே  சமூக தளங்களில் ஏ.ஆர். ரகுமான் மீதான விமர்சனங்கள் அதிகமான நிலையில் ஏசிடிசி நிறுவனத்தின் இயக்குனர் ஹேமந்த்குமார் ஒரு வீடியோ வெளியிட்டு,  ‘ரகுமான் ஒரு லெஜண்ட். அவர் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திக் கொடுத்தார். அங்கே ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அவரை விமர்சிக்காதீர்கள். முழு பொறுப்பையும்  நானே ஏற்றுக் கொள்கிறேன். நிகழ்ச்சியை காண முடியாதவர்களுக்கு டிக்கெட் பணம் திரும்ப வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சி சர்ச்சையால் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்  செப்டம்பர் 11 ஆம் தேதியே நிகழ்ச்சி நடந்த இடத்தைப் பார்வையிட்டார்.  அடுத்த நாளே பாதுகாப்பு குறைபாடுகளுக்காக பள்ளிக்கரணை துணை ஆணையர் தீபா சத்யன்  காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில்தான் நிகழ்ச்சி நடந்த இந்த இடம் காவல்துறை ரீதியாக தாம்பரம் மாநகர காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும்… நிர்வாக ரீதியாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டே இருக்கிறது. சென்னை மாநகராட்சியின் 15 ஆவது மண்டலமான சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 197 ஆவது வார்டில் இருக்கிறது ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடந்த இடம்.  நிகழ்ச்சியை நடத்திய நிறுவனமான ஏசிடிசியும் சென்னை மாநகராட்சிக்குள்தான் இருக்கிறது.

இந்த அடிப்படையில் நேற்று  சென்னை மாநகராட்சியின்  துணை வருவாய் அலுவலர் மூலமாக அண்ணா நகரில் இருக்கும் ஏசிடிசி அலுவலகத்துக்கு சென்று,  ரகுமான் இசை நிகழ்ச்சி தொடர்பான கேளிக்கை வரியை செலுத்துமாறு நோட்டீஸ் அளிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வட்டாரங்களில் நாம் பேசியபோது,  “சென்னை மாநகராட்சியின் வரியினங்களில் ஒன்று பொழுதுபோக்கு மீதான கேளிக்கை வரி.  திரையரங்குகள் இதற்கான வரியை  தொடர்ந்து கட்ட வேண்டும். அதேநேரம் இதுபோன்ற பொழுதுபோக்கு இசை நிகழ்ச்சி நடத்துபவர்கள் தங்கள் வசூலிக்கும் டிக்கெட் கட்டணத்தில் 10% சென்னை மாநகராட்சிக்கு பொழுது போக்கு கேளிக்கை வரியாக செலுத்திட வேண்டும். நிகழ்ச்சி நடத்துவதற்கு முன்பாகவே  குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸ் வரியும் செலுத்த வேண்டும்.

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் மூலம் கிடைத்திருக்கும் வருமானம் 10 கோடியில் இருந்து 20 கோடி வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதற்கான கேளிக்கை வரியை அவர்கள் மாநகராட்சிக்கு செலுத்தியாக வேண்டும். அது தொடர்பாக உதவி வருவாய் அலுவலர் நிகழ்ச்சி நடத்திய நிறுவனத்தின் அலுவலகத்துக்கே சென்று நோட்டீஸ் கொடுத்து வந்திருக்கிறார். சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சிக்கு வரவேண்டிய வருமானத்தைத் திரட்டும் நோக்கில்தான் இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டிருக்கிறது.  கணிசமான பேருக்கு கட்டணங்களை திரும்பக் கொடுக்க வேண்டியிருப்பதால் நிகழ்ச்சி நடத்திய நிறுவனம் சார்பில் கேளிக்கை வரிகட்ட அவகாசம் கேட்டிருப்பதாக தெரிகிறது” என்கிறார்கள்.

டிக்கெட் கட்டணத்தைத் திரும்பக் கொடுங்கள் என்று பலரும் சமூக தளங்களில் கோரிக்கை வைத்து வரும் நிலையில்… வசூலித்த டிக்கெட் கட்டணத்துக்கு கேளிக்கை வரி கட்டுங்கள் என்று சென்னை மாநகராட்சியும் களமிறங்கியிருக்கிறது.

வேந்தன்

இந்திய மாணவி பலி: கேலி பேசிய அமெரிக்க போலீசாரிடம் விசாரணை!

நிபா வைரஸ் அதிகரிப்பு: 706 பேரை பட்டியலிட்ட சுகாதாரத் துறை!

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *