ennur gas leak green tribunal

எண்ணூர் வாயு கசிவு: தொழிற்சாலையை முற்றுகையிட்ட மக்கள்.. பசுமை தீர்ப்பாயம் விசாரணை!

தமிழகம்

எண்ணூர் தொழிற்சாலையில் வாயு கசிவு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் பெய்த கனமழையின் போது எண்ணூர் பகுதியில் வெள்ளநீருடன் சேர்ந்து கச்சா எண்ணெய் கழிவும் கலந்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதற்கு சரியான நிவாரணம் வழங்க வேண்டும் என்று மக்கள் அரசை வலியுறுத்தி வரும் நிலையில், எண்ணூர், பெரிய குப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் உர தொழிற்சாலையில் இருந்து நேற்று (டிசம்பர் 27) நள்ளிரவு வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலைக்கு திரவ அமோனியாவை கொண்டு வருவதற்காக கடலுக்கடியில் பதிக்கப்பட்ட குழாயில் இருந்து நள்ளிரவு ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து இந்த தொழிற்சாலையைத் தற்காலிகமாக மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வாயு கசிவு ஏற்பட்ட கோரமண்டல் உர தொழிற்சாலையை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தொழிற்சாலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. வரும் ஜனவரி 2 ஆம் தேதி இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணூரில் கச்சா எண்ணெய் கழிவு விவகாரத்தையும் பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

அயலான் ஆடியோ லான்ச்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்

தென்மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0