எண்ணூர் எண்ணெய் கசிவு: நிவாரணம் எவ்வளவு?

Published On:

| By Selvam

ennore oil spill tamil nadu government announced relief

மிக்ஜாம் புயல் கனமழையினால் எண்ணூர் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணம் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 23) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் 5 அன்று பெய்த கன மழையின் காரணமாக கொசஸ்தலை ஆற்றில் எண்ணூர் முகத்துவார பகுதியில்  எண்ணெய் கசிவு ஏற்பட்டது.

இதனால் காட்டுக்குப்பம். சிவன்படைகுப்பம். எண்ணூர் குப்பம், முகத்துவாரகுப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம். வ.உ.சி நகர், உலகநாதபுரம் மற்றும் சத்தியவாணி முத்து நகர் ஆகிய கடலோர மீனவ கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடிவலைகளில் எண்ணெய் படிந்து சேதம் ஏற்பட்டது.

மேலும், இக்கிராமங்களை சார்ந்த மீனவர்கள் எண்ணெய் கசிவினால் மீன்பிடித் தொழிலுக்கு செல்ல இயலாததால் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.

இதைக் கருத்தில் கொண்டு,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்த தொகை  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கூடுதலாக எண்ணெய் கசிவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மேற்கண்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 2,301 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.12,500 வீதமும்,

மேலும் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 787 மீன்பிடி படகுகளை சரிசெய்திட படகு ஒன்றிற்கு தலா ரூ.10,000 வீதமும்,

மொத்தம் ரூ.3 கோடி அரசினால் ஒப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது.

மேலும், சென்னை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு 4, 6, மற்றும் 7 ஆகிய பகுதிகளில் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வீதம் மொத்தம் ரூ.5.2 கோடி நிவாரணத் தொகை வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிவாரணத் தொகையினை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.

எனவே, மிக்ஜாம் புயல் கனமழையினால் ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பள்ளி மாணவிகளிடம் காவல்நிலையத்தில் விசாரணை: ஆவேசமான ரஞ்சனா நாச்சியார்

கிச்சன் கீர்த்தனா: ரைஸ் டிக்கியா வித் சாஸ்