ennore oil spill green tribunal case
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய் கழிவுகளை 13 நாட்கள் ஆகியும் இன்னும் முழுமையாக அகற்றாதது ஏன் என்று தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் இன்று (டிசம்பர் 14) கேள்வி எழுப்பியுள்ளது.
மிக்ஜாம் புயல் மழை, வெள்ளத்தின் போது தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய எண்ணெய் கழிவுகள் எண்ணூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் கலந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், “கடலில் எண்ணெய் கலக்காமல் இருப்பதற்காக , 625 மீட்டருக்கு எண்ணெய் தடுப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மீனவ கிராமங்களில் கரையோரம் பாதிக்கப்பட்டிருந்த 20 டன் மணல், லாரிகள் மூலம் எடுக்கப்பட்டு கும்மிடிப்பூண்டியில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதேபோல, 33 டேங்கர் லாரிகளில் ஒரு லாரிக்கு 220 லிட்டர் எண்ணெய் வீதம் 7,760 லிட்டர் எண்ணெய் கழிவுகள் கடல் மற்றும் ஆறுகளில் அகற்றப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது பசுமை தீர்ப்பாய நீதிபதிகள், “சம்பவம் நடைபெற்று 13 நாட்கள் ஆகியும் மிகவும் குறைவான அளவில் மட்டுமே எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது என்பது மிகவும் கவலை அளிக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நிவாரணம் வழங்க போகிறீர்கள்? எவ்வளவு மீன் வளம் அழிந்துள்ளது? இதனால் எத்தனை கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தெளிவான விளக்கங்கள் விசாரணையில் தெரியவரவில்லை” என்று தெரிவித்தனர்.
அப்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், “எண்ணெய் கலந்துள்ள பகுதிகளில் அண்ணா பல்கலைக்கழக நிபுணர் குழு மற்றும் ஐஐடி நிபுணர் குழு ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். எண்ணெய் கழிவை அகற்ற டிசம்பர் 20-ஆம் தேதி வரை அவகாசம் தேவைப்படும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
சிபிசிஎல் நிறுவனம் தரப்பில், “எண்ணெய் கழிவை அகற்ற 2-ஆவது ஸ்கிம்மர் பணியை துவங்கியுள்ளோம். டிசம்பர் 17-ஆம் தேதிக்குள் 90 சதவிகித எண்ணெய் கழிவுகள் அகற்றப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.
மீனவர்கள் தரப்பில், “அரசும், சிபிசிஎல் நிறுவனமும் மனித தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மீனவர்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எண்ணெய் தடுப்பு மிதவைகள் சரியான இடங்களில் அமைக்கப்படவில்லை. உடனடியாக எண்ணெய் கழிவுகளை அகற்றி மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எண்ணெய் கழிவு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை டிசம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக எம்.பி கணக்கை துவங்கும்: பிரேமலதா உறுதி!
இந்தி தெரியாதா? சென்னை பெண்ணை அவமதித்த சிஐஎஸ்எஃப் வீரர்! நடந்தது என்ன?
ennore oil spill green tribunal case