பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 26) வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என தமிழகத்தில் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
இந்த பொறியியல் கல்லூரிகளில் 1,54,000 இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் 2023-24 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு மே 4 ஆம் தேதி முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது.
மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. அவர்களில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 பேர்தான் தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கடந்த இருபதாம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் 1,54,124 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.
சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டுள்ளார்.
மாணவர்கள் தங்களுக்கான தரவரிசை பட்டியலை www.TNEAonline.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 ஆம் தேதி வரை மாணவர்கள் தரவரிசை பட்டியல் தொடர்பாக புகார் அளிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஜூலை 2 ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கவிருந்த நிலையில் மருத்துவ கலந்தாய்வு தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படுவதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மோனிஷா
வெண்புள்ளி பாதித்தவர்களை தனிமைப்படுத்தினால் நடவடிக்கை: எச்சரித்த மா.சுப்பிரமணியன்