பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பொதுக்கலந்தாய்வு செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 25 தேதி பொறியியல் பொதுக் கலந்தாய்வு நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் நீட் தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு நாட்களுக்குப் பிறகு கலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார்.
கலந்தாய்வு நடைபெறும் தேதிகள்
தற்போது நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.
எனவே, பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
செப். 10-12 ஆம் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு, செப். 25-27 ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு,
அக். 13-15 ஆம் தேதி வரை மூன்றாம் கட்ட கலந்தாய்வு, அக். 29-31 ஆம் தேதி வரை நான்காம், கட்ட கலந்தாய்வு எனக் நான்கு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது.
எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு நவ. 10-20 தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். 12 ஆம் வகுப்பு முடிவுகள் தாமதமாக வந்த மாணவர்களுக்கு நவ.15-17 வரை துணை கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு
பொதுக்கலந்தாய்வில் 31 சதவீதம் இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வழங்கப்படும்.
பி.சி பிரிவுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீட்டில் 3.5 சதவீதம் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும். மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
ஆதி திராவிடர்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில் 3 சதவீதம் அருந்ததியர்களுக்காக வழங்கப்படும். பழங்குடியினர்களுக்கு 1 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
ஒவ்வொரு பிரிவுகளிலும் உள் இட ஒதுக்கீடாக 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மோனிஷா
பட்டமளிப்பு விழாவா, பாஜக மேடையா?: ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி கேள்வி!