பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ஆம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூலை 2-ஆம் தேதி கலந்தாய்வு துவங்க உள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இன்று (மே 19) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “பட்டயப்படிப்பில் (பாலிடெக்னிக்) சேர்வதற்கு நாளை (மே 20) முதல் விண்ணப்பிக்கலாம். பட்டயப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 10 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு இணையான கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான பதிவு கட்டணம் வழக்கம் போல் ரூ.150 மட்டும் தான். எஸ்,சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்குப் பதிவு கட்டணம் இல்லை.
அனைத்து தகவல்கள் மற்றும் வழிகாட்டி தொலைப்பேசி எண்களைக் கேட்டறிவதற்காக மாணவர்கள் https//:www.tnpoly.in என்ற இணையத்தளத்தின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். 51 பாலிடெக்னிக் கல்லூரிகளில் மொத்தம் 1 லட்சத்து 62 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன.
பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவித்திருந்த நிலையில் முன்னதாக ஜூலை 2 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது.
சிறப்பு இடஒதுக்கீடு ஜுலை 2 முதல் 5 வரை, பொது கலந்தாய்வு ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 24 வரையும் நடைபெறும்.
துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 26 முதல் ஆகஸ்ட் 29 வரை நடைபெறும். எஸ்.சி மற்றும் எஸ்.டி கலந்தாய்வு செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
கலந்தாய்வுகளுக்குப் பிறகு முதலாமாண்டு பொறியியல் படிப்பு செப்டம்பர் 3 ஆம் தேதியிலிருந்து தொடங்கும்.
இதுவரை தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2,58,627 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மே 22 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் விண்ணப்பிப்பதற்காக சனி, ஞாயிறுகளிலும் கல்லூரிகள் திறந்திருக்கும். பல்கலைகழக்கத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை 3 ஆண்டிற்கும் சேர்த்து முதலாமாண்டு படிக்கும் போதே செலுத்தி வந்த நிலையில், இனிமேல் ஆண்டிற்கு ஒரு முறை செலுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான கட்டணத்தொகை தான் வசூலிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் ஆண்டிற்கு 200 ரூபாய் என 3 ஆண்டுகளுக்கு சேர்த்து 600 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும்.
இது தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து கல்லூரிகளுக்கும் பொருந்தும்” என்று தெரிவித்துள்ளார்.
மோனிஷா
”நன்றாக புரிந்து கொண்டேன்”: ஐஸ்வர்யாவிற்கு ராஷ்மிகா பதில்!
10 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: முழு விபரம்!