அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் ரூ.51 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் டிசம்பர் 1-ஆம் தேதி கைது செய்தனர். தற்போது அவர் மதுரை சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்.
இந்தநிலையில், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை துணை இயக்குனர் பிரிஜேஷ் பெனிவால் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு டிசம்பர் 2-ஆம் தேதி புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், “டிசம்பர் 1-ஆம் தேதி மதியம் 1.15 மணியளவில் சந்தேகத்திற்கிடமான இரண்டு நபர்கள் தங்களை உளவுத்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள்.
அவர்களிடம் அடையாள அட்டை மற்றும் வருகையின் நோக்கம் குறித்து கேட்டபோது எந்த பதிலும் இல்லை.
பின்னர் மதியம் 2.30 மணியளவில் 35 பேர் தங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு அமலாக்கத்துறை அலுவலகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தார்கள்.
அவர்களின் அடையாள அட்டையை கேட்டபோது தர மறுத்துவிட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் சத்தியசீலன் மட்டும் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். சர்ச் வாரண்ட் எதுவும் காட்டவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சீருடை மற்றும் பேட்ஜ் அணியவில்லை.
அனைவரும் டிசம்பர் 1 மதியம் 2.30 மணி முதல் டிசம்பர் 2 காலை 7.15 மணி வரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்தனர். அவர்களிடம் தொடர்ந்து சோதனைக்கான காரணம், முதல் தகவல் அறிக்கை, அடையாள அட்டையை கேட்டும் எதுவும் தெரிவிக்கவில்லை. சோதனையில் ஈடுபட்ட 35 லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும் பின்வரும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த அங்கித் திவாரி அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது, வழக்கிற்கு தொடர்பில்லாத கோப்புகளையும் முக்கியமான ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.
அங்கித் திவாரியின் அலுவலக அறை மூடப்பட்டது. அமலாக்கத்துறை அலுவலகம் முழுவதும் சூறையாடப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு நபர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு மற்ற ஆவணங்களின் தகவல்களை கொடுத்தனர்.
சீனியர் அதிகாரிகளின் அழுத்தத்தினால் சோதனையில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
சோதனை முடிந்து போகும்போது, இரண்டு சாட்சியங்களுடன் நான்கு அதிகாரிகள் மட்டுமே தேடுதலுக்கு அங்கீகாரம் பெற்றிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தோம்.
மற்றவர்கள் காவல்துறை அதிகாரிகளா என்று தெரியவில்லை. அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் தெரியவில்லை. 35 அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் உள்ளது.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக சோதனை நடத்தியுள்ளனர். அவர்கள் மீது ஐபிசி 447, 506, 378, 353,447,506 ஆகிய சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேர்தல் முடிவுகள்: 4 மாநில மக்களுக்கும் பிரதமர் நன்றி!
தற்காலிக பின்னடைவு… காங்கிரஸ் மீண்டு வரும் – கார்கே நம்பிக்கை!