2024ல் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்க இருப்பதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னையில் 2024ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. ஜனவரி 7, 8-ம் தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கான வேலைகளை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மேற்கொண்டு வருகிறார்.
இந்த முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து அவர் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
“இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முதலீட்டாளர்கள் மாநாடு மிகச்சிறந்த மாநாடாக இருக்கும். இதன்மூலம் நமது மாநிலத்துக்கு நல்ல பயன் கிடைக்கும்.
இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் எந்த மாதிரியான வேலைகளை உருவாக்க வேண்டும் என்பதில் முதல்வர் தெளிவாக இருக்கிறார். படித்த இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள், தென் தமிழகம், டெல்டா பகுதிகள் மற்றும் மேற்கு மண்டலத்தில் உள்ள இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் வேண்டும். எனவே இந்த பகுதிகளுக்கு நிறுவனங்களைக் கொண்டு செல்ல முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் முதலீடுகளைக் கொண்டு வந்து, அதன்மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் காண முதல்வர் விரும்புகிறார்.
இளைஞர்கள் எந்த மாதிரியான வேலைகளைத் தேடுகிறார்கள், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இந்த மாநாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எண்ணிக்கையில் முதலீடுகளை ஈர்க்கப்போகிறோம்.
எந்த வகையான வேலைகள் இங்கு வரவேண்டும் என்பதிலும், அந்த வேலைகள் எங்கெங்கெல்லாம் வர வேண்டும் என்பதிலும் நாங்கள் அதிக ஆர்வத்துடன் செயல்படுகிறோம். எண்ணிக்கையில் 20 லட்சம் கோடி, 30 லட்சம் கோடி என்பதை உருவாக்க முடியும். ஆனால் இதெல்லாம் சென்னையில் மட்டும் நடந்தால் எங்களுக்கு மகிழ்ச்சியைத் தராது. மாநிலம் முழுவதும் சமமான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.
நமது மாநிலம் மின்சார வாகன உற்பத்தியில் வலுவாக இருக்கிறது. இந்த துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும், பேட்டரி மற்றும் அதன் நவீன உபகரணங்கள் தயாரிப்பிலும் கவனம் செலுத்தப்படும்.
இதுதவிர விண்வெளி , பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குக் கவனம் செலுத்தவும் ஆர்வத்துடன் உள்ளோம்.
தமிழகத்திற்கு என்ன தேவை? யாருக்குத் தேவை? எங்குத் தேவை என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறோம். தமிழ்நாடு அரசு தெளிவான கொள்கை வரையறையுடன் செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஹர்திக் பாண்டியா விவகாரத்தில்… ரூபாய் 100 கோடி பணம் கைமாறியதா?… வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
“வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரார்த்தனை” : தமிழகத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ்!