ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கன்சல்டன்சி நிறுவனத்தின் உரிமையாளருக்கு மகிளா நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறைத்தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
தனியார் கன்சல்டன்சி நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு பிரிவில் வேலை பார்த்து வந்த பெண் ஊழியரை,
பாலியல் பலாத்காரம் செய்ததாக, உரிமையாளர் ஆண்டனி ஜான் மில்டன் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
மயக்க மருந்து அளித்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் நிர்வாண நிலையில் இருந்தபோது புகைப்படங்களை எடுத்து,
அதை காண்பித்து மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்றம் கடந்த 2014 ம் ஆண்டு நிறுவன உரிமையாளருக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆண்டனி ஜான் மில்டன் மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நடைபெற்றது. அப்போது நிறுவன உரிமையாளர் சார்பில் சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் பல்வேறு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
அதை விசாரித்த நீதிபதி வழக்கில் இன்று(அக்டோபர் 6) தீர்ப்பு வழங்கினார். பாலியல் பலாத்காரம், மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக,
மகிளா நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறைத்தண்டனையை ரத்து செய்தார். அபராதத் தொகையைத் திரும்பப் பெறவும் உத்தரவிட்டார்.
நீதிபதி தீர்ப்பு விவரம்
பலாத்காரம் நடந்ததாகக் கூறப்படும் நாளில் அலுவலகத்தில் ஊழியர் மகிழ்ச்சியுடன் நடமாடுகிறார்,
புகார்தாரரின் நிர்வாண புகைப்படங்கள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய அவரது மொபைல் போனை போலீசார் கைப்பற்றவில்லை.
புகார்தாரர் அளித்த சாட்சியங்களில் முரண்பாடுகள் உள்ளன. மருத்துவ சான்றுகளுடன் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
புகார்தாரர் முற்றிலும் நம்பகமான சாட்சி அல்ல. சரியான உறுதிப்படுத்தல் இல்லாமல் அவரது சாட்சியத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
முதலில் காவல்துறையை அணுகுவதற்கு முன்பு அவரும் அவரது தாயும் நிறுவனத்தின் உரிமையாளரை சந்தித்துள்ளார்கள்.
எனவே வழக்கு சந்தேகத்தை உருவாக்குகிறது. வழக்கு நம்பகத்தன்மையற்றது என்றும், தண்டனையை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் தீர்ப்பில் கூறிய நீதிபதி மகிளா நீதிமன்றம் விதித்த தீர்ப்பை ரத்து செய்தார்.
கலை.ரா
சசி தரூர் சென்னை வருகை: ஆள் திரட்டும் கார்த்தி சிதம்பரம்
மாவட்டத்துக்கு ஒரு அதிகாரி: மழையை எதிர்கொள்ள தயாராகும் அரசு!