மின்கட்டண உயர்வுக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்!

தமிழகம்

’’தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க முடியாது” என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் புதிய மின் கட்டண உயர்வு கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. புதிய மின்கட்டண உயர்வுக்கு அதிமுக, பாஜக, அமமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

அதே நேரத்தில், ’மின் கட்டண உயர்வு 100 யூனிட்டுக்குள் மின்சாரத்தை பயன் படுத்துவோருக்கு இல்லை’ என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதுடன், ’தமிழக மின்வாரியம் கடந்த 10 ஆண்டுகளாக கடன் சுமையில் உள்ளது.

மேலும், ஆண்டுக்கு ரூ. 16,511 கோடி வட்டி செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. இதன் காரணமாகத்தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது’ என தமிழக அரசு விளக்கம் அளித்தது.

நூற்பாலைகள் சங்கம் வழக்கு:

இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டதற்கு பின்னர்தான் மின் கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

electricity tariff increase no ban in supreme court

இந்த வழக்கு நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வில் இன்று (நவம்பர் 21) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், “கடந்த 3 மாதத்துக்கு முன்னர் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு சட்டத்துறையை சேர்ந்த நபர் நியமனம் செய்யப்படவில்லை.

எப்போது உறுப்பினர் நியமிக்கப்படுவார் என்பது உறுதியாக தெரிய வேண்டும். மேலும் தற்போதைய நிலையில் மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும், மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

electricity tariff increase no ban in supreme court

தமிழக அரசு பதில்:

அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில், “சட்டத் துறையை சேர்ந்த நபரை தேர்ந்தெடுக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மனுதாரரின் நோக்கம் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தவிர, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு சட்டத்துறை உறுப்பினரை நியமனம் செய்ய வேண்டுவது அல்ல.

எனவே மனுதாரரின் கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் உறுப்பினர் நியமனத்தை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது.

தற்போதைய நிலையில், தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஜெ.பிரகாஷ்

விஜய் ஹசாரே தொடர்: 5 சதமடித்து அசத்திய தமிழக வீரர்!

நாட்டில் 50 தரமற்ற மருந்துகள்: ஆய்வில் தகவல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *