மின் கட்டணம் செலுத்த ஆதார் கட்டாயம் எனச் சொல்வது நிறைய குழப்பத்தை விளைவிப்பதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதற்கான இணைப்பு முகவரியையும் மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மின் நுகர்வோர் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என மின்சார வாரியம் அறிவித்துள்ள போதிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருப்போர் அவை அனைத்துக்கும் தங்களது ஒரே ஆதார் எண்ணை பதிவு செய்வதால் ஏதேனும் சிக்கல் வருமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
இதனாலேயே பலர் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காமல் உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் தங்களுடைய மின் இணைப்புகளில் ஆதாரை இணைப்பதற்கு நிறைய பிரச்சினைகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
குறிப்பாக, மின் இணைப்பு பெற்றவர்களில் பலர் இறந்து போயிருப்பதாகவும், அவர்களுடைய பெயர்களை நீக்கி, மின் இணைப்பு அலுவலகங்கள் தற்போது வசிக்கும் நபர்களுக்கு மின் இணைப்புகளை மாற்றித் தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், சொத்துக்கள் பிரிக்கப்படாததால் மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பலரும் புலம்பி வரும் நிலையில், இரத்தினவேலு வசந்தா என்பவர் இன்று (நவம்பர் 25) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார்.
அதில், “மின் கட்டணம் செலுத்த ஆதார் கட்டாயம் என சொல்வது நிறைய குழப்பத்தை விளைவிக்கிறது. பல குடும்பங்களில் மின் இணைப்பு இன்னும் தாத்தா, தந்தை ஆகியோரது பெயரில் உள்ளது.
அவர்களில் பலர் இறந்துவிட்டனர். ஆனால் இணைப்பு பெயர் மாற்றப்படவில்லை. காரணம் சொத்து பிரித்து வழங்கப்படவில்லை” என அவர் பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே, ”மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. இதுகுறித்து மக்களிடம் விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
போதிய அவகாசம் கொடுக்க வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
“மனசாட்சிப்படி உண்மையை சொல்லுங்கள்”- சுவாதியிடம் நீதிபதிகள் சரமாரிக் கேள்வி!
ஆன்லைன் ரம்மி – தினம் தினம் 10 கோடி: கவர்னர் தள்ளும் மர்மம்!