“வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை, மழை எந்தளவுக்கு பெய்தாலும்கூட மின் விநியோகத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாத வகையில் முன்னெச்சரிக்கை பணிகளாகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
சென்னையில் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு, இந்த ஆண்டு பருவமழை பாதிப்புகள் எப்படியிருந்தாலும்,
மின் விநியோகம் சீராக இருக்க வேண்டும் என்பதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள பணிகள், அதில் முடிவடைந்துள்ள பணிகள், இன்னும் முடிக்கப்படாமல் இருக்கும் பணிகளை விரைவாக முடிப்பதற்கு உண்டான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த வடகிழக்குப் பருவமழைக்காக மின்மாற்றிகளைப் பொறுத்தவரை, 14,442 கையில் இருப்பாக உள்ளன. மின்கம்பங்களைப் பொறுத்தவரை, 1 லட்சத்து 50,932 மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன.
ஏறத்தாழ 12,780 கி.மீட்டர் அளவுக்கு மின் கம்பிகள் தயார் நிலையில் இருக்கின்றன. எனவே, இந்த மழைக் காலங்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் உள்ள பொருட்களின் இருப்புகள் குறித்தும், அந்தந்த மண்டலங்கள், வட்டங்கள் வாரியாக தேவையான பொருட்கள் குறித்து ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சென்னையைப் பொறுத்தவரை, 2,692 பில்லர் பாக்ஸ்கள் தரைமட்டத்தில் இருந்து ஒரு மீட்டர் அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த மழையின்போது இது பெரிய அனுபவமாக இருந்தது. அரை மீட்டர் தண்ணீர் தேங்கினால்கூட அதை சரி செய்ய மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், ஒவ்வொரு மின் பகிர்மானக் கழக வட்டத்துக்கும் ஒரு செயற் பொறியாளர் தலைமையில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை, மழை எந்தளவுக்கு பெய்தாலும்கூட மின் விநியோகத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாத வகையில் முன்னெச்சரிக்கை பணிகளாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று அமைச்சர் கூறினார்.
-ராஜ்
ஃபேஸ்புக், வாட்ஸ்அப் செயலிக்கு தடை!
’பொன்னியின் செல்வன்’ – ’நானே வருவேன்’: அள்ளிக் கொண்ட அமேசான்