மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்ச குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இவ்வாறு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் பாதிக்கப்படாது எனவும் மின்சாரத் துறை அறிவித்திருந்தது.
மின் நுகர்வோர்கள் நேரடியாகவும் இணையத்தளம் வாயிலாகவும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதியில் இருந்து தொடங்கியது. மேலும் இதற்காகக் கடைசி தேதி டிசம்பர் 31 ஆம் தேதி வரை என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காகத் தமிழகத்தில் உள்ள 2,811 மின் வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் மக்களுக்கு பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் இருந்த நிலையில் அதற்கான தீர்வுகளை அளித்து வந்த மின்சாரத் துறை ஆதார் எண்ணை இனைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்தது.
அதன்படி டிசம்பர் 31 ஆம் தேதியில் இருந்து ஜனவரி 31 ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஜனவரி மாதம் இறுதிவரை அவகாசம் அளித்தும் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. இதனால் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை 2வது முறையாக அவகாசம் நீட்டிக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத மின் நுகர்வோர்களின் பெயர் பட்டியலுடன் அவர்களது வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மின்சாரத் துறை அதிகாரிகள் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி இன்றுடன் (பிப்ரவரி 15) முடிவடைகிறது. எனவே, ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் உடனடியாக இணைத்திடுமாறு தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுவரை சுமார் 2.61 கோடி மின் நுகர்வோர் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்துள்ளனர். ஆனால் சுமார் 6 லட்சம் பேர் இன்னும் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்க வேண்டும் என்றும், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கத் தவறினால் மின் கட்டணம் செலுத்த முடியாது என்றும் மின்சாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோனிஷா
வேலைவாய்ப்பு: இந்தியன் வங்கியில் பணி!
ஆசிரியர்களின் கோரிக்கையை ஆய்வு செய்ய குழு!