தமிழகத்தில் புதிதாக உயர்த்தப்பட்ட மின்கட்டணம் இன்று (செப்டம்பர் 11) முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் அதிமுக, பாஜக , நாம் தமிழர் உட்பட பல கட்சிகளும் வலியுறுத்தியுள்ள நிலையில் மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்று தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் கொடுத்துள்ளது.
தேர்தல் அறிக்கையில் “1000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு ரூ.6000 வரை பயனடையும் வகையில், மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும்” என வாக்குறுதி அளித்த திமுக, மின்சாரக் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டபோதே அதிமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டாமென்று நினைப்பவர்கள் அதனை விட்டுக் கொடுக்கலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து இருப்பது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
திமுக வின் தேர்தல் அறிக்கையில், மாதம் ஒரு முறை மின் உபயோக கணக்கிடும் முறை கொண்டு வரப்பட்டு அதன் மூலம், 1000 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6000 ரூபாய் வரையில் பயன் பெறுவர் என்று குறிப்பிட்டிருந்தது. ஆட்சிக்கு வந்து ஓராண்டை கடந்த நிலையில் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இந்த கட்டண உயர்வின் மூலம் 1000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் கூடுதலாக ஆண்டுக்கு 10,000 ரூபாய் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்” என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.
மேலும் , ”ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

”மின்கட்டண உயர்வு குறித்து தமிழகத்தில் 3 இடங்களில் மட்டும் தான் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையினர் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என கருத்துத் தெரிவித்தனர்.
அதன்பிறகும் மின்கட்டணத்தை உயர்த்துவது நியாயமல்ல என்றும் மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், இந்தக் கட்டண உயர்வு தேவையற்றது. மக்களின் இந்த மனநிலையை உணர்ந்து மின்கட்டண உயர்வை தமிழ்நாடு மின்சார வாரியம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இந்நிலையில் , தமிழகத்தில் புதிதாக உயர்த்தப்பட்ட மின்கட்டணம் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு, வரும் 2027-ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மின் கட்டண உயர்வு தொடர்பாக, தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், மொத்தக் கடன் நிலுவைத் தொகை சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடியாக இருப்பதாகவும், மின்வாரியம் செலுத்த வேண்டிய வட்டியும் 259 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய அரசின் திட்டங்களின் கீழ் நிதி பெறுவதற்கான கட்டாய நிபந்தனைதான் மின் கட்டணத் திருத்தம் என்றும், ரிசர்வ் வங்கியும், மத்திய அரசின் நிதி நிறுவனங்களும் ஆண்டுதோறும் மின் கட்டணத்தில் திருத்தம் செய்ய நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாடு மின்வாரியம், கட்டணத்தை திருத்தம் செய்யாமல் இருந்ததால், பல சட்ட அமைப்புகளிடம் இருந்து கண்டனங்கள் வந்ததாகவும், எனவே 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மின் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்