தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 19) வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று விளக்கம் அளித்துள்ளார்.
இதுத்தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதா சாஹு, “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை 40 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு முன்னதாக மாதிரி வாக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்.
வாக்களிக்க முதலில் வரும் வாக்காளர்கள் முதல், கடைசி வாக்காளர்கள் வரை அனைவரும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 3.32 லட்சம் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில், 10.92 லட்சம் பேர் முதல் முறையாக வாக்காளிக்கும் வாக்காளர்கள்.
தமிழகத்தில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக 181 வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சுமார் ஒரு லட்சம் மாநில காவல்துறையினர் மற்றும் ரிசர்வ் போலீசார் என மொத்தம் 1.3 லட்சம் போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
1.58 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் 72.47 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
வாக்காளர் அடையாள அட்டைக்கோரி மார்ச் 27ஆம் தேதி வரை விண்ணப்பித்த அனைவருக்கும் வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை தவிர அங்கீகரிக்கப்பட்ட 12 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்.
அதாவது, ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட், வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட 12 ஆவணங்களை வைத்து வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தலாம்.
65% வாக்குச்சாவடிகள் ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்படும். 85 வயதிற்கும் மேற்பட்ட 67 ஆயிரம் பேர் தபால் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
சிவிஜில் செயலி மூலம் நேற்று வரை 4,861 புகார்கள் வந்துள்ளன. நேற்று வரை தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.173 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ‘டெலிட்’ செய்த யுவன்?… ரசிகர்கள் அதிர்ச்சி..!
ரூ.4 கோடி பறிமுதல்… நயினார் நாகேந்திரனுக்கு சிக்கலா? – உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!