மகன் – மகள்கள் இருந்தும் அருகில் இருந்து கவனிப்பதற்கு யாரும் இல்லாத நிலையில் மயிலாடுதுறையில் வயதான தம்பதியரின் விபரீத முடிவு பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மயிலாடுதுறை அருகே நீடூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் 69 வயது இளங்கோவன், ஹோமியோபதி மருத்துவராக உள்ளார். இவருக்கு செந்தாமரை என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இளங்கோவனுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், மனைவி செந்தாமரை சிறுநீரக கோளாறால் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். elderly couple suicide attempt
மகள்கள் மற்றும் மகனுக்கு திருமணம் ஆகி மகள்கள் வெளியூரிலும் மகன் இனியவன் வீட்டின் மேல் பகுதியிலும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இளங்கோவன், தன்னையும் தன் மனைவி செந்தாமரையையும் கவனிப்பதற்கு ஆட்கள் இல்லை என்பதால் மனமுடைந்து, நேற்று காலை கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு இளங்கோவன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது கேஸ் சிலிண்டர் வெடித்து தீ பரவியதில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்து தரைமட்டமானது. தம்பதியர் இருவரும் படுகாயம் அடைந்தனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே மனைவி செந்தாமரை பரிதாபமாக உயிரிழந்தார்.
இளங்கோவன் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக நீதிபதி கலைவாணி, படுகாயம் அடைந்த இளங்கோவனிடம் நேரில் விசாரணை மேற்கொண்டபோது, கவனிக்க ஆள் இல்லாததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி இளங்கோவனும் பரிதாபமாக உயிரிழந்தார்.
கவனிக்க ஆள் இல்லாததால் வயதான தம்பதியர் எடுத்த இந்த விபரீத முடிவு அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்த மயிலாடுதுறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.