கனவாய் போன கானக வாசம் !

சிறப்புக் கட்டுரை தமிழகம்

ஸ்ரீராம் சர்மா 

கொட்டித் தீர்த்த மிக்ஜாம் மழையினைக் குறித்து எத்தனை ஆட்சேபணைகள் இங்குண்டோ அத்தனையும் எனக்குள்ளும் உண்டுதான் ஆயினும் அதற்கு மேலும் சில சங்கதிகள் உண்டு. 

எதிலும் மாற்றங்களை விரும்பும் மின்னம்பலத்தாரோடு என் வாழ்வனுபத்தை ஒரு மின்னலிழை போல சற்றே பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.  

***

அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான வேளச்சேரியதன் நடுமத்தியில்தான் அந்த அற்புதமான இல்லத்தை இயற்கை எனக்கு அமைத்துக் கொடுத்தது. நல்ல நல்ல மனிதர்களும், வீசும் மரங்களும், சாலைகளும், பூங்காக்களும் சூழ குறையேதுமின்றி அமைந்த அந்த ஆனந்த நிலத்துக்குள்தான் பொல்லாத மிக்ஜாம் புயல் புகுந்தது.   

அன்றதிகாலை ஐந்து மணி போல வெடுக்கெனப் போன அந்த மின்சாரம் அடுத்த எண்பது மணி நேரங்களுக்கு மீளாது போகும் என நினைத்துப் பார்த்தேனா எனில் இல்லை. 

நடுப்பகல் கடந்தப் பொழுதில் மெல்ல மெல்ல உயர்ந்து கழுத்தளவுக்கு ஏறி நின்ற வெள்ளத்தைக் கண்ட எனக்கு இந்த வெள்ளம் இன்று நாளைக்குள் வடியக் கூடியதில்லை என்பதும், போன மின்சாரம் அவ்வளவு எளிதாய் திரும்பப் போவதில்லை என்பதும் ஆழமாக உரைத்துவிட…

போகட்டும், இதுகாறும் காணாததொரு புதுவித அனுபவம் நிச்சயம் கிட்டப் போகிறது அதுபோதும் என ஒரு எழுத்தாளனாக உள்ளுக்குள் குதூகலித்துக் கொண்டேன் ! வெளியே சொன்னால் குடும்பம் சுட்டெறித்துவிடும் என்பதால் ஆதூரமாக தெம்பு சொல்லியபடி மெல்ல கவனித்துக் கொண்டிருந்தேன்.

***

வேளச்சேரியில் PG எனப்படும் Paying Guest விடுதிகள் அதிகமதிகம். பல்வேறு மாவட்டங்களில் இருந்து படிப்புக்காகவும், வேலைகளுக்காகவும் வந்திருக்கும் யுவ, யுவதிகள் ஆங்கே தங்கியிருப்பார்கள்.

மொட்டை மாடிக்கு சென்ற எனது மனைவியும் மகளும் பக்கவாட்டில் அமைந்திருந்த PG ஒன்றின் சாளரங்கள் வழியாக ஏரிபோல சூழ்ந்திருக்கும் நீரளவை அதிர்ச்சியோடு வெறித்திருந்த மாணவிகளை நோக்கி…

“எல்லாரும் சாப்டீங்களாப்பா…இருப்பதை சமைத்து அனுப்புறோம். கயிறு கட்டி இழுத்துக்குறீங்களாப்பா…?” என உரத்த குரலில் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். உள்ளம் குளிர்ந்தேன்.

***

கீழிறங்கி வந்த எனது மனைவி டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு… 

“ஐயோ,என் செல்ஃபோன் வேலை செய்யலீங்களே… என் மாணவிகளின் கதி என்னவாச்சுன்னு தெரியலையே… யாரிடமாவது பேசி இதற்கு மட்டுமாவது அனுமதி கொடுக்க முடியுமான்னு கேளுங்களேன்” என நச்சரித்துக் கொண்டிருந்தார். 

“நகரமே தத்தளித்துக் கொண்டிருக்கும்போது நமக்காக அரசாங்கத்தாரை அழைத்துப் பேசுவது நாகரீகமாக இருக்குமாம்மா?” என்றேன். குரலடங்கிப் போனார். 

எனது மனைவியார் வேலுநாச்சியார் மணிமேகலை சர்மாவின் தலைமையில் அமைந்த OVM டான்ஸ் அகாடமி பள்ளிகளை இதுகாறும் நான் நேரில் சென்று கண்டதில்லை. தன்னிடம் பயிலும் நூற்றுக்கணக்கான உலகார்ந்த பரதநாட்டிய மாணவிகள் யாவரையும் ஒரு குடும்பமாக எண்ணி மானுடம் கவிய அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதை அன்றுதான் அறிந்தேன். நெஞ்சம் நிறைந்தேன்.

***  

அடுத்த நாள் காலை சாளரங்களின் வழியே ‘ சளக், சளக் “ எனும் ஓசை கேட்க விரைந்தெழுந்து பார்த்தால்…

உச்சந்தலையில் உடைமைகளை சுமந்தபடி மாரளவு நீரில் கொம்புகளை முன்னே ஊன்றிக் கொண்டு பேரச்சத்தோடு PG வாழ் யுவ, யுவதிகளும், ஒரு சில குடும்பங்களும் மெயின்ரோட்டை நோக்கி மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தார்கள்.

விர்ரென அவர்களைக் கடந்து முன்னேறிய சில பாம்புகள் எதிரே இருக்கும் காலிமனைக்குள் தஞ்சம் புகுந்து கொண்டன. அலறலும், துணிச்சலுமாக மேலுமவர்கள் முன்னேறிக் கொண்டேயிருந்தார்கள். 

கையறு நிலையில் தலைகுனிந்து நின்றவன் போய் வாருங்கள் மக்களே என புன்சிரிப்பற்ற அனிச்சை செயலாய் கை அசைத்தபடி இருந்தேன்.

*** 

“ப்ளீஸ், என்னை விட்டுருப்பா… என் கடைப் பசங்களுக்கு என்னவாச்சுன்னு பாக்கப் போறேன். பத்திரமா திரும்பி வந்திருவேன். என்னை நம்புப்பா.. ” என்ற எனது மகன் மாரளவு நீரில் (கிரிக்கெட்டரான அவனது உயரம் 6.2) வெள்ளத்தோடு மோதி, மெயின் ரோட்டுக்கு சென்று, அங்கிருந்து ஆட்டோ பிடித்தோடி அவனது வேலையாட்களுக்கும் தன் கடைகளுக்கும் ஒருவழி கண்டபின்பு, இருளடைந்த அந்தப் பொழுதில் பால் மற்றும் கொஞ்சம் பழங்களோடு வீட்டுக்கு திரும்பி வந்தான். ஆச்சரியப்பட்டேன்.

***

மாலை முற்றியது. மின்சாரமற்ற வேளச்சேரி கருகும்மென இருண்டிருந்தது.

மனைவி ஏற்றி வைத்த ஐந்தாறு அகல் விளக்குகளால் வீடே ரம்மியமாகி இருந்தது.  

கல்லூரி விட்டு வந்தால் சோஃபாவில் சாய்ந்து கொண்டு OTT எபிசோடுகளும் செல்ஃபோனுமாக பொழுதை வீணாக்கும் என் மகளின் கையில் இப்போது ஒரு புத்தகம் முளைத்திருந்தது. எப்போதோ வாங்கிக் கொடுத்திருந்த Amish Tripathi யின் The secret of Nagas ! 

அந்த நிசப்தமான பொழுதில், குன்றிய விளக்கொளியின் அடியில் முழூ கவனத்தோடு படித்தபடி அவள் திருப்பிக் கொண்டிருந்த அந்த புத்தகப் பக்கங்களின் ‘ஸ்ஸ்ரக், ஸ்ஸ்ரக், ’ எனும் சப்தம் அன்றந்த திருவல்லிக்கேணி ஓட்டு வீட்டுக்குள் ராவெல்லாம் மல்லாந்தபடி நான் படித்த சங்க இலக்கிய நினைவுகளை மீட்டெடுத்து தந்தது. மனம் நிறைந்தேன்.

***

பொழுது கவிய… இருளுக்குள் மெல்ல கால்பாவி நகர்ந்து வீட்டு பால்கனியை எட்டிப் பிடித்து வெளியுலகை உற்றுப் பார்த்தேன். எங்கெனும் மகா இருள். 

ஆகாகா, ஆளரவம் இல்லாததொரு அமைதியான ஏகாந்தப் பொழுது அது.

சமையலறை மட்டும் விட்டுக் கொடுத்தபாடில்லை.

இந்தக் குடும்பம் நிலைகுலைந்துவிடலாகாது என நினைத்தாளோ என்னவோ எமர்ஜென்ஸி லைட்டை தேவைக்கேற்றபடி ஆன் செய்வதும் அணைப்பதுமாக ஊரே கமகமக்க ஒரு சமையலை செய்து கொடுத்து ஒன்றாக அமர்ந்துண்ண அழைத்தாள் குடும்பத் தலைவி. அசந்து போனேன்.

***

நேரம் அது பத்து. சாதாரண நாட்களுக்கு அது இரவு ! 

மின்சாரமற்று, ஆள் நடமாற்றமற்று, ஏரி நீர் சூழ வாழ்ந்திருந்த எங்களுக்கு அது நள்ளிரவு ! ஒரே அறையில் குடும்பமாய் உறங்க வாய்த்த அழகானதோர் இரவு அது.

திடுமென எழுந்தன அந்த அமானுஷ்ய குரலோசைகள்…

சூழ்ந்திருந்த ஏரி நீரிலேறிய ஆயிரக்கணக்காண அப்பாவித் தவளைகள் ஓயாது கூச்சலிடத் துவங்கின. 

இரண்டாக பிரிந்து நின்று ஒரு க்ரூப் அடித் தொண்டையில் குரலெழுப்ப, மற்றொரு குரூப் மேல் ஸ்தாய் கொண்டு ஓங்கிக் குரல் எழுப்ப, மொத்தமும் ஒன்றிணைந்து ஏதோ சாந்தோம் சர்ச்சில் எழுப்பும் ‘கோயர் பாடல்’ போல ஒலித்திருக்க, அந்தத் தவளை கச்சேரி ராவெல்லாம் இனித்துக் கொண்டே இருந்தது. 

அடடா, அடடா.. அந்த தவளைக் கோயர் இசையொலிகள் ஒன்றுபோல எழுவதும் ஒன்றுபோல சட்டென அடங்குவதுமாக இருப்பது எப்படி? தாள சொடுக்கிட்டபடி கவனித்தால் அதன் தாள கதிகள் ஒன்பது, ஆறு, அல்லது மூன்று கவுண்ட்டுகளுக்கு ஒருமுறை சட்டென அடங்கி மீண்டும் தொடர்கிறதே. அதுதான் எப்படி ?

இயற்கையின் ஆச்சரியங்கள் ஆயிரம் உண்டு போல இந்த உலகில் என வியந்து கொண்டேயிருந்தேன். 

“இன்னும் நீ தூங்கலையாப்பா..” என்றபடி இடது புறம் திரும்பி விசிற முனைந்த மகளின் கரங்களை மடக்கியபபடி உறங்குவதுபோல நடித்துக் கொண்டிருந்தேன். 

*** 

நள்ளிரவில் விளக்கை எடுத்துக் கொண்டு பாத்ரூம் சென்ற எனக்கு அதன் ஜன்னலில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஏதோ ஒன்று சுருண்டு கிடப்பது போன்றதொரு தோற்றம். பாம்பாக இருக்குமோ ? 

சற்றே விலகி நின்றபடி விளக்கை அதன் அருகே மெல்ல கொண்டு சென்றேன். 

அடடா, ஆங்கே அருமையானதொரு பறவைக் கூடு !

மாமழை ஒன்று வரும். அதிலிருந்து என் குஞ்சுகளை காப்பாற்றியே ஆக வேண்டும் என முன்பே அறிந்த தாய்ப்பறவை ஒன்று அவசரமாக கட்டி வைத்திருந்த குச்சிகளால் ஆன அரண்மனை அது ! விழி கலங்க விதிர்த்து நின்றேன்.

*** 

அடுத்த நாள் விடிய சாளரங்களின் வழியே குரல்கள் கேட்டன. 

ஒரு போட்டை எடுத்துக் கொண்டு தௌஹித் ஜமாத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள் வந்தார்கள். ரஸ்க் பாக்கெட், பிஸ்கெட் பாக்கெட், பால் என கேட்டுக் கேட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

என்னை அடையாளம் கண்டு கொண்ட ஒரு தம்பி,

“அண்ணே, நலமாயிருக்கீங்களா? வேற எதாவது தேவையாண்ணே ?” என்றார்.

“ஆமாம் தம்பி, இந்த ஏரியா கவுன்ஸிலரை எங்கயாவது கண்டா, இதே போட்டில் ஏற்றிக் கொண்டு வந்து அந்த திருமுகத்தை எனக்குக் கொஞ்சம் காட்டுங்க தம்பி” என்றேன். விரக்தியோடு சிரித்தபடி எதிர் வீட்டுக்கு ரஸ்க் பாக்கெட் கொடுக்கப் போனார்.   

ஆர்.எஸ்.எஸ். களமிறங்கி வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து போட் வைத்து மீட்டுக் கொண்டிருந்தார்கள். உணவு பொட்டலங்களை வழங்கி ஆறுதல் சொல்லியபடி போனார்கள். 

விஜிபி செல்வ நகர் அசோஸியேஷன் அதன் தலைவர் சேகர் தலைமையில் ஒன்றிணைந்து செல்ஃபோன் டவர் கிடைக்கும் போதெல்லாம் வாட்ஸப்பில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்தது. என்னளவில் இயன்றதை செய்து கொடுத்துக் கொண்டிருந்தேன்.

***

72 மணி நேரம் கடந்த பின்னும் மின்சாரமின்றிக் கிடப்பதை அறிந்த எனது மூத்த சகோதரர் என்னை திட்டித் தீர்த்தார். “நீலாங்கரையில் மின்சாரம் வந்தாகிவிட்டது. அனைத்து வசதியும் இங்கிருக்கிறது. கிளம்பி வாயேண்டா…” என்றார். உள்ளூர் வெளியூர்களில் இருக்கும் எனது தங்கைகளும் அழுத்தம் கொடுத்தபடியே இருந்தார்கள்.  

அண்டை வீட்டார்களை அம்போ என விட்டுவிட்டு நகர்ந்து போக மனம் இடம் கொடுக்கவில்லை. மாரளவு நீர் இருக்கிறது. காரை வெளியே எடுக்க முடியாது என ஏதேதோ சொல்லி சமாளித்தபடி இருந்தேன்.   

***

ஒருவழியாக மின்சாரம் மீண்டது. வெள்ளம் வடிந்து சாலைகள் தோற்றமளிக்கத் துவங்கின. தவளைக் கச்சேரியும் ஓய்ந்தது. 

எனக்கு வாய்த்த அந்த எண்பது மணி நேர கானக வாசம் ஒரு கனவுபோல காணாமலே போனது.

***

எனது இன்றைய கவலையெல்லாம் இந்த மாமழைப் பேயாட்டத்தின் அடுத்த கட்டம் தென்மாநிலங்களை நோக்கியிருப்பதாக சொல்கிறார்கள். 

ஐயகோ, அந்த வானிலை கணிப்பு பொய்த்துத்தான் போகட்டுமே ! இது போலொரு பதைபதைப்பும் இழப்பும் இனியொருமுறை எம் தமிழகத்தை அணுகாதிருக்கட்டுமே என காமாட்சிப்பட்டியில் அமைந்தருளும் என் குல தெய்வத்தை தெண்டனிட்டு வேண்டுகிறேன்!  

ஆயினும், இயற்கையை வெல்ல எவராலும் இயலாது. ஆம், கோயில்களுக்கு உள்ளேயே புகும் வல்லமை அதற்கு உண்டு. எல்லாம் வல்ல அரசாங்கமே ஆனாலும் அகண்ட இயற்கைக்கு முன் அது ஒரு தூசு.

ஒட்டுமொத்த அமைச்சர்களும் கூடியிருக்கும் தலைநகருக்கே இந்த கதி என்றால்… ஓ, என் தென் மாவட்டங்களே… தயவுசெய்து விழிப்புணர்வோடு இருங்கள். எதையும் எதிர்பார்த்திருங்கள்.

அப்பாவி கால்நடைகள், இல்லார், இயலாதார் எல்லோரையும் முன் எச்சரிக்கையோடு உஷார்ப்படுத்தி வைத்தபடி காப்பாற்றுங்கள். 

வாழிய நலம் !

***

தலைநகரில் அடித்துப் பொழிந்த இந்த மாமழை பறித்துக் கொண்டு போன அந்த 17 அப்பாவி உயிர்களுக்கு நெஞ்சம் கசிய அஞ்சலி செய்தபடி இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கிறேன்.

ஓ..

மாமழையே ! மாமழையே !

நீ எங்களுக்கு 

தாய்போலானவள் அல்லவா ?

அடங்காத பிள்ளைகளை 

அடித்துத்தான் 

வளர்க்க வேண்டுமா ?

கொஞ்சம் 

அரவணைத்து வளர்த்தால் 

ஆகாதோடீயம்மா !?

கட்டுரையாளர் குறிப்பு

Eighty hours of Forest life by Sriram Sharma

வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர்.

300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.

அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஒரு வாரத்திற்கு பிறகு சென்னையில் இன்று பள்ளிகள் திறப்பு!

செங்கல்பட்டு: சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!

புயல் பாதிப்பு: நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன்

வேலைவாய்ப்பு : MRB- யில் பணி!

+1
0
+1
3
+1
0
+1
6
+1
0
+1
1
+1
0

3 thoughts on “கனவாய் போன கானக வாசம் !

  1. ⚛️🐿️🔔🐒⚛️வேளச்சேரி அன்பர் போல..ஒட்டுமொத்த சென்னை தொகுதிகள் அனைத்தைப்பற்றியும்அந்தந்தத் தொகுதிக்கு ஒருவராக..இந்த மழைநாட்கள்நாட்குறிப்பை,.. ஸ்ரீ ராம் போலும் பதிவிடவும் ! அடுத்த அடைமழை நாள் வரும்முன்.இன்னும் எங்கெங்கே எப்படி யெல்லாம் மழை எவரெவரை எந்தகோணத்தில், காணவைக்கிறது ! என்பதை AI முன் submission செய்யவேண்டும் ! கன்னாபின்னாவென்று ஓடிக்கொண்டிருந்த 🕰️காலம்..”சின்னமா🐜பின்னமா- 🐜சென்னை மழை மட்டுமா ! என்ற தன் கேள்வியையும் முன் வைக்கிறது ! Wait and see.! wait in the gate ? நாமளும் ஏதாவது 🤔✍🏻😴🇮🇳well bye now 🌿 🌄நல்லிரவு வணக்கம்ஜீ.நன்றிஃநற்பவிஜீ🌲🏠🙏

  2. கட்டுரை மிகவும் அருமை. ரசித்து படித்தேன்.
    நன்றி.

  3. அருமையான வெள்ளத்திற்கிடையிலும் மனதை கிளுகிளுக்க வைக்கும் கட்டுரையை தந்த தங்களை பாராட்டுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *