முட்டையில் உள்ள புரதம் மற்ற உணவுகளிடமிருந்து கிடைப்பதைவிட சிறந்தது. உடலுக்குத் தேவையான அனைத்துவித அமினோ அமிலங்களையும் தருவது. அதிகமாக வேக வைக்காமல், மிதமாக வேக வைத்து சாப்பிட்டால், 100 சதவிகிதம் செரிமானம் ஆகும். புரதம், ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, வைட்டமின் பி12, காப்பர் போன்ற அனைத்து வகைச் சத்துக்களும் இந்த முட்டைத் தொக்கில் கிடைக்கும். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் சைடிஷாக சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
என்ன தேவை?
அவித்த முட்டை – 2
பெரிய வெங்காயம் – 2
பூண்டு – 5 பல்
காய்ந்த மிளகாய் – 3
உப்பு, மஞ்சள் தூள் – தலா அரை டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
உரித்த பூண்டு, நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய், உப்பு ஆகியவற்றை அரைக்கவும். அவித்த முட்டைகளைக் கீறி எடுத்துக்கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, சூடானதும், அரைத்த விழுதைப் போட்டு, நன்கு சுருள வதக்கி, பச்சை வாசனை போனதும், கீறிய முட்டைகளைப் போட்டு, இரண்டு முறை பிரட்டி விட்டு, இறக்கிவிடலாம்.
குறிப்பு: முட்டைகளை வேக வைக்கும்போது, லேசாக உப்பு சேர்த்து வேக விட்டால் ஓடு சுலபமாகக் கழன்று வந்துவிடும்.