வைஃபை ஆன் செய்ததும் அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான விஷயங்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜூலை 11 (2022) பொதுக்குழு செல்லும் என்று கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தாலும் அந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களால் பாதிப்பு இருந்தால் உரியவர்கள் நீதிமன்றத்தை நாடலாம் என்று வித்தியாசமான கருத்தையும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்கள் நீதிபதிகள்.
இதை அடிப்படையாக வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினர் பொதுக்குழு தீர்மானங்களை செல்லாது என்று அறிவிக்கக் கோரி வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு மார்ச் 17 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி தரப்பின் பதிலை கேட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில்… அன்று மாலையே பொதுச் செயலாளர் தேர்தலை அறிவித்தார் எடப்பாடி.
கடந்த மார்ச் 9 ஆம் தேதி கூடிய மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் பேசியபடியே மார்ச் மாதத்துக்குள் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதில் தீவிரமாக இருந்த எடப்பாடி அதன்படியே அறிவித்தார். மார்ச் 18, 19 தேதிகளில் பொதுச் செயலாளர் பதவிக்கு வேட்பு மனு கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி 18 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவர் பெயரில் பலர் மனு தாக்கல் செய்தாலும் அவருக்கு எதிராக யாரும் போட்டியிடவில்லை. இந்த நிலையில்தான் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க கோரி அவசரமாக வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர்.
உயர் நீதிமன்ற பதிவாளருக்கு மெயில் அனுப்பி அவசர வழக்காக 19 ஆம் தேதியே விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். காரணம், 19 ஆம் தேதியோடு வேட்பு மனு தாக்கல் முடிகிறது. இதில் நீதிமன்றம் தலையிடவில்லை என்றால் வேட்பு மனு தாக்கல் முடிந்து போட்டியின்றி எடப்பாடி பொதுச் செயலாளர் தேர்வாகிவிட்டார் என்று அறிவித்துவிடுவார்கள், அதனால் 19 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையே விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதன்படியே விசாரித்த நீதிமன்றம் ஏற்கனவே பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக பன்னீர் தரப்பு தொடுத்த வழக்குகள் ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் அவற்றையும் இந்த மனுக்களையும் சேர்த்து 22 ஆம் தேதி விசாரித்து 24 ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக தெரிவித்துள்ளது.
அதுவரை பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் பொதுச் செயலாளர் தேர்தலே மார்ச் 26, முடிவு 27 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது நீதிமன்றம்.
24 ஆம் தேதி தீர்ப்பு எப்படி வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக சொல்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.
அதாவது பொதுக் குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று உயர் நீதிமன்றம் சொல்லாது என்பது எடப்பாடி தரப்பின் நம்பிக்கை.
அப்படி ஒருவேளை பொதுக்குழு தீர்மானம் செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டால் கூட என்னாகும்…? மீண்டும் பொதுக் குழுவை கூட்ட வேண்டும். அப்போது பொதுக்குழு கூட்ட ஓபிஎஸ் ஒப்புக் கொள்ள மாட்டார்.
அதிமுக கட்சி விதிகளின்படி பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கேட்டால் பொதுக்குழுவை தலைமைக் கழகமே கூட்டலாம், அப்படிப் பார்த்தால் கடந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளரை உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையோடு எடப்பாடிக்கு முழுக்க முழுக்க ஆதரவான பொதுக்குழுதான் அவைத் தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவித்தது. அது தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டு இரட்டை இலை சின்னம் எடப்பாடியின் வேட்பாளர் தென்னரசுக்கு கிடைத்தது. இந்த ஏற்பாட்டை பன்னீரும் அன்று ஏற்றுக் கொண்டார் என்பதும் கவனிக்கத் தக்கது.
எனவே பொதுக்குழு என்பது முழுக்க முழுக்க எடப்பாடியிடமே இருக்கிறது. எனவே பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என்று உயர் நீதிமன்றம் ஒருவேளை கூறினாலும் புதிய பொதுக் குழுவை ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்களின் கோரிக்கை மூலம் எடப்பாடி கூட்டுவார். அதில் மீண்டும் பன்னீரை நீக்குவார், மீண்டும் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் இதற்கெல்லாம் வாய்ப்பில்லாமல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தும்’ என்கிறார்கள் எடப்பாடி தரப்பில்.
இதற்கிடையே பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி தனது ஆதரவாளர்களோடு தானும் பர்சனலாக உயர் நீதிமன்றத்தில் மார்ச் 20 ஆம் தேதி ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார் பன்னீர்.
பன்னீர் செல்வம் ஆதரவாளர்களிடம் விசாரித்தபோது, ‘பன்னீர் செல்வம் தொடர்ந்து எடப்பாடியோடு சமரசத்துக்கு முயன்றார். ஆனால் எடப்பாடி அதற்கு 100 சதவிகிதம் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால்தான் சட்டத்தின் சந்துபொந்துகளில் எல்லாம் புகுந்து எடப்பாடிக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதை தீவிரமாக்கிவிட்டார் பன்னீர். ஒருகட்டத்தில் எடப்பாடியே சலித்துப் போய் பன்னீரோடு சமரசத்துக்கு வருவார் பாருங்களேன்… ஏனென்றால் எடப்பாடியிடம் கட்சி இருந்தாலும் பன்னீரிடம் சட்ட பாயின்ட்டுகள் இருக்கின்றன’ என்கிறார்கள்.
இப்படியாக அதிமுகவின் அதிகார யுத்தம் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. எடப்பாடி ரிலாக்ஸாகவே இருக்கிறார் என்பதுதான் தற்போதைய நிலவரம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
பட்ஜெட்: அதிருப்தியில் தலைமை செயலக சங்கம்!
சொற்ப ரன்களில் சுருண்ட மும்பை இந்தியன்ஸ் !
ரஷ்யாவில் சீன அதிபர்: முடிவுக்கு வருமா உக்ரைன் போர்?