கடந்த 2022-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2 ஏ முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 9 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. இதில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இதனை தொடர்ந்து முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வு இந்த ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெற்றது. முதன்மை தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார், ஆனால் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.
இதனால் தேர்வர்கள் பலரும் குரூப் 2 தேர்வு முடிகள் எப்போது வெளியாகும் என கேள்வி எழுப்பி எக்ஸ் வலைதள பக்கத்தில் #WeWantGroup2Results என்ற ஹேஷ்டாக் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி
செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வு முடிவுகளே 2 மாதங்களில் வெளியாகிவிட்ட நிலையில், மாநில தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு முடிவுகள் 10 மாதங்களாக வெளிவராமல் இருக்கின்றது. சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சரோ “இன்று வந்துவிடும்- நாளை வந்துவிடும்” என்று சொல்லி மாதங்களும் கடந்தோடுகிறதே தவிர முடிவுகளை வெளியிட எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசுக்கு எனது கடும் கண்டணங்கள்.
அமைப்பு குளறுபடிகளைக் களைவதற்கு, திமுக அரசு உடனடியாக டிஎன்பிஎஸ்சி அமைப்பிற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து, நிலுவையில் உள்ள தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட்டு, தேர்வானவர்களுக்கான பணி ஆணைகளை வழங்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் காலி அரசு பணியிடங்களை நிரப்ப , முறையான தேர்வு கால அட்டவணைகளை வெளியிட்டு, அதனை சீரான முறையில் ஒழுங்குடன் பின்பற்றி உடனடியாக தேர்வுகளை நடத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
அண்ணாமலை
தமிழக அரசுப் பணிகளுக்காக, கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2, 2A முதன்மைத் தேர்வு முடிவுகள், 10 மாதங்கள் கடந்தும் இன்னும் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது திமுக அரசு.
ஆணையத்தின் தலைவர் பொறுப்பில் தங்களுக்கு வேண்டப்பட்டவரை நியமிப்பதற்காக, ஒரு ஆண்டுக்கும் மேலாக அந்தப் பதவியைக் காலியாகவே வைத்திருக்கும் திமுக அரசு, போட்டித் தேர்வு எழுதி, அரசுப் பணிகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களிடம் மட்டும் நியாயமாக நடந்து கொள்ளப் போகிறதா என்ற கேள்வி எழுகிறது.
உடனடியாக குரூப் 2, 2A அரசுத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதோடு, காலதாமதத்துக்கான காரணங்களையும் பொதுவெளியில் கூற வேண்டும். அரசுப் பணிகளுக்காகத் தேர்வுகள் எழுதி, எப்போது முடிவுகள் வரும் என்றே தெரியாமல், அரசின் தவறுகளால் அலைக்கழிக்கப்படும் இளைஞர் சமுதாயம், இனியும் இது போன்ற திறனற்ற செயல்பாடுகளைப் பொறுத்துக் கொள்ளாது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
தென் இந்தியா பாரதத்தின் கலாச்சார கோட்டை: ராஜ்நாத் சிங் பெருமிதம்!
தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1,200 கோடிக்கு மேல் பெற்ற 5 மாநில கட்சிகள்!