சாதி பெயரில் சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறை விவகாரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென ஐஆர்எஸ் அதிகாரி எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள செங்கேணிகுட்டை பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் கிருஷ்ணன் (71) மற்றும் கண்ணையன் (75). இருவரும் தங்கள் வீட்டிற்கு அருகே 6.5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இருவரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து 6 ஏக்கர் விவசாய நிலம் வாங்கியுள்ளதாகவும், இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படியும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.
மேலும் அனுப்பப்பட்ட சம்மனில் முதியவர்களின் வீட்டு எண்ணை குறிப்பிடாமல், அவர்களின் சாதியை குறிப்பிட்டிருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இதற்கு கம்யூனிஸ்ட், நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேலும் சாதி பெயரை குறிப்பிட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையே, கிருஷ்ணன் மற்றும் கண்ணையன் ஆகியோர் தங்களது வழக்கறிஞர் பிரவீனாவுடன் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வங்கிக்கணக்கு, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களோடு ஆஜராகினர்.
அப்போது தாங்கள் எந்தவித சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடவில்லை என்றும், தங்களது வங்கி கணக்கில் ரூ.450 மட்டுமே உள்ளது என்றும் விவசாயிகள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் நிலம் தொடர்பான பிரச்னை காரணமாக சேலம் பாஜக கிழக்கு மாவட்ட செயலாளர் குணசேகரனின் தூண்டுதலின் பேரிலேயே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதாக சகோதரர்கள் இருவரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
சென்னையில் சரக்கு, சேவை வரி மற்றும் மத்திய கலால் வரி துணை ஆணையராக பணியாற்றி வரும் பாலமுருகன் எழுதியுள்ள அந்த கடிதத்தில், “தலித் சமூகத்தை சேர்ந்த ஏழை விவசாயிகளின் நிலத்தை பறிக்கும் நோக்கில் அவர்களின் சாதியை குறிப்பிட்டு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சம்மன் அனுப்பப்பட்ட இரண்டு விவசாயிகளின் வங்கிக் கணக்கிலும் 450 ரூபாய்தான் உள்ளது. மேலும் 2 பேரும் அரசு முதியோர் ஓய்வூதியம் ரூ.1000 மற்றும் ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகிறார்கள்.
எங்கள் முன்னோர் விவசாயிகள். நானும் பணிக்கு வருவதற்கு முன்பு விவசாயம்தான் செய்து வந்தேன். ஓய்வுக்குப் பின்னரும் விவசாயப் பணிகளைத்தான் கவனிக்க இருக்கிறேன்.
மாநில அரசு அதிகாரிகளைப் போல எங்களது நிலை இல்லை. மத்திய அரசு அதிகாரிகளாகிய நாங்கள் எங்கள் கடமையை நிறைவேற்றுவதில் உள்ளூர் அரசியல்வாதிகளின் அழுத்தத்தை எதிர்கொள்கிறோம். எனது 30 வருட பணியில் எந்த ஒரு உள்ளூர் அரசியல்வாதியும் எந்த ஒரு சலுகைக்காகவும் எங்களுக்கு அழுத்தம் தந்து பார்த்ததில்லை. பொதுவாக, டெல்லி வழியாகவே அழுத்தம் தருவார்கள். ஆனால், இப்போது உள்ளூர் அரசியல்வாதிகளே நேரடியாக அழுத்தம் தர ஆரம்பித்துவிட்டனர் என்பதற்கு விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய விவகாரமே சான்று.
சேலம் பாஜக கிழக்கு மாவட்ட செயலாளர் குணசேகரன் அளித்த புகாரில் அவர்களுக்கு சம்மன் அனுப்பியது என்பது ஆச்சரியமளிக்கும் வகையிலும், கண்டிக்கும் வகையிலும் உள்ளது. அந்த முதியவர்கள் மீது குற்றம்சாட்டிய பாஜக பிரமுகர் மீது வழக்கு உள்ளது. தற்போது அவர் சிறைக்கு வெளியே இருந்தாலும் கூட அவரது புகாரில் சம்மன் அனுப்பியது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த சம்பவம் பாஜகவின் கையாளாக அமலாக்கத் துறை மாறிவிட்டது என்பதையே காட்டுகிறது. நிர்மலா சீதாராமன் நிதியமைச்சரான பிறகு அமலாக்கத்துறை பாஜகவின் கொள்கை துறையாகவே மாறிவிட்டது.
இந்த சம்பவத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் முழுப் பொறுப்பு. நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கவே நிர்மலா சீதாராமனுக்கு தகுதியில்லை.
ஆகவே, பட்டியலின ஏழை விவசாயிகளுக்கு நீதி வழங்கும் வகையிலும், அமலாக்கத் துறையை காப்பாற்றும் வகையிலும் நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து நிர்மலா சீதாராமனை குடியரசுத் தலைவர் பதவி நீக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் விவசாயிகள் தரப்பில் வழக்கு நடத்திவரும் வழக்கறிஞர் பிரவீனா, ஐ.ஆர்.எஸ். அதிகாரி பாலமுருகனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா