செந்தில்பாலாஜி தம்பி அசோக்குமார் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து அமலாக்கத்துறை இயக்குநரகம் இன்று (ஆகஸ்ட் 14) அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் நேற்று முன்தினம் வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. இந்த நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் வைத்து செந்தில்பாலாஜி தம்பி அசோக்குமாரை நேற்று அமலாக்கத்துறை கைது செய்ததாக தகவல் வெளியானது.
இதனை நேற்று இரவு வரை அமலாக்கத்துறை உறுதிபடுத்தவோ, மறுக்கவோ செய்யவில்லை. இதுதொடர்பாக மின்னம்பலம் மற்றும் பல்வேறு ஊடங்களிலும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் செந்தில்பாலாஜி தம்பி அசோக்குமார் கைது செய்திக்கு மறுப்பு தெரிவித்து அமலாக்க இயக்குநரகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் , “செந்தில் பாலாஜியின் (முன்னாள் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ) சகோதரர் ஆர்.வி.அசோக் குமார், அமலாக்கத்துறையால் கேரளாவில் கொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒரு தவறான செய்தி பல செய்தி ஆதாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக அசோக் குமார் அமலாக்கத்துறையால் கைதோ அல்லது தடுப்பு காவலிலோ வைக்கப்படவில்லை என்பது தெளிவுபடுத்தபடுகிறது.
எவ்வாறாயினும், தற்போதைய விசாரணையின் ஒரு பகுதியாக 16.06.2023, 21.06.2023, 29.06.2023 மற்றும் 15.07.2023 ஆகிய நான்கு முறை அசோக் குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
எனினும், அவர் அற்பமான பொருத்தமற்ற காரணங்களை மேற்கோள் காட்டி சம்மனுக்கு பதிலளிக்கும் வகையில் அமலாக்கத்துறை முன் ஆஜராக மறுத்துவிட்டார்.
இதேபோல், அவரது மனைவி நிர்மலா மற்றும் அவரது மாமியார் பி லட்சுமி ஆகியோரும் தனிப்பட்ட சம்மன்களுக்கு ஒத்துழைக்கவில்லை.
எனினும் குற்றங்களின் வருவாயை அடுக்கி சொத்துக்கள் குவித்ததில் மூன்று நபர்களும் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்பதை கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஜெகதீஸ்வரன் தற்கொலை எதிரொலி: ஆளுநரின் விருந்தை புறக்கணிக்கும் திமுக
“எத்தன ஜெகதீஸை, அனிதாவை நாங்க இழக்கணும்?”: உதயநிதியிடம் நேருக்கு நேர் மாணவர் கேள்வி!