அமலாக்கத்துறை சோதனை எதிரொலியாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் பங்குசந்தையில் கடந்த 12 மாதங்களில் முதன்முறையாக கடும் சரிவை சந்தித்துள்ளது.
அந்நிய செலாவணி விதிமீறல் தொடர்பாக சென்னையில் உள்ள இந்தியன் சிமெண்ட்ஸ் தலைமை அலுவலகத்தில் நேற்றும், இன்றும் 2 நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் பங்குச் சந்தைகளுக்கு இன்று (பிப்ரவரி 1) விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “அமலாக்க இயக்குனரகத்தின் சில அதிகாரிகள் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள எங்கள் நிறுவன அலுவலகத்திற்குச் சென்று, FEMA தொடர்பாக ஏதேனும் முறைகேடுகள் உள்ளதா என்பதைக் கண்டறிய சோதனை நடத்தினர்.
அதிகாரிகள் கோரிய அனைத்து ஆவணங்களையும் நிறுவனம் வழங்கியுள்ளது. மேற்கூறிய விசாரணையில் நிறுவனத்தின் மீது எந்தவிதமான தாக்கத்தையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.” என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே அதன் இணை நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ் கேபிடல் லிமிடெட் (ஐசிசிஎல்) நிறுவனத்திலும் வெளிநாடுகளுக்கு பணம் மாற்றியது தொடர்பாக சோதனை நடைபெற்றுள்ளது.
39 ஆண்டுகளாக இயங்கி வரும் ஐசிசிஎல் வெளிநாட்டு நாணயங்களை வாங்குதல் மற்றும் விற்பதில் முதன்மையாக ஈடுபட்டுள்ளது. கடந்த 2023ஆம் நிதியாண்டில் ரூ.0.70 கோடி வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.208 கோடி பதிவு செய்தது.
அமலாக்கத்துறையின் இந்த திடீர் சோதனையால், மும்பை பங்குச்சந்தையில் இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு சுமார் 7 சதவீதம் சரிந்து, தோராயமாக ரூ243க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
கடந்த 12 மாதங்களில் இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு 26% உயர்ந்தது. இந்தநிலையில், 2022 டிசம்பருக்குப் பிறகு இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாக தற்போது பதிவாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
24 ஆண்டுகளுக்கு பின் அஜித்துடன் இணையும் தபு
”பாரத ரத்னா விருது கொடுத்தாலும் வாங்கமாட்டேன்” : ராமதாஸ்