அரசு மருத்துவரிடம் மதுரை அமலாக்கத் துறை அதிகாரி லஞ்சம் பெற்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் அமலாக்க அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர் அங்கித் திவாரி. திண்டுக்கல்லைச் சோ்ந்த அரசு மருத்துவா் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் வாங்கியதாக டிசம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், “29.10.2023 அன்று, அங்கித் திவாரி திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவரை தொடர்பு கொண்டு, அவர் மீது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு பற்றி பேசியிருக்கிறார்.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்ததாகவும், அதனால் 30.10.2023 அன்று மதுரையில் உள்ள அமலாக்க இயக்குனரக அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறும் அங்கித் திவாரி அரசு மருத்துவரிடம் கேட்டுக்கொண்டார்.
அதன்படி, அரசு ஊழியர் மதுரைக்கு சென்றபோது, அவரது காரில் ஏறிய அங்கித் திவாரி, வழக்கில் சட்ட நடவடிக்கையை தவிர்க்க ரூ.3 கோடி தர வேண்டும் என்று பேரம் பேசினார்.
இறுதியாக உயரதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி ரூ.51 லட்சம் கொடுத்தால் போதும் என்று கேட்டுள்ளார். வாட்ஸ்அப் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் பலமுறை கேட்டு மிரட்டியுள்ளார்.
இதனால் அங்கித் திவாரி மீது சந்தேகம் அடைந்த அரசு ஊழியர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். இந்தநிலையில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அரசு மருத்துவரிடமிருந்து லஞ்சம் பெற்ற அங்கித் திவாரியை கைது செய்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள அங்கித் திவாரி வீடு, மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் ஆகியவற்றிலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட அமலாக்காத் துறை அதிகாரி அங்கித் திவாரி திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமலாக்கத்துறை அதிகாரியின் வங்கிக் கணக்கு, பண பரிவர்த்தனை, மின்னஞ்சல், வாட்ஸ் அப் தகவல்கள் மற்றும் ஆவணங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுபோன்ற தொடர் விசாரணையில் லஞ்ச ஒழிப்புத் துறை மேலும் ஒருவரை கைது செய்துள்ளது.
அமலாக்கத் துறை அதிகாரிக்கும், அரசு மருத்துவருக்கும் இடைத்தரகராக செயல்பட்ட சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தரப்பில் கூறுகின்றனர். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில், மேலும் சிலர் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
பிரியா
முக்கியமான மெசேஜ் மிஸ் ஆகிடுச்சே: அப்டேட் குமாரு
தெலங்கானா டிஜிபி சஸ்பெண்ட்: காரணம் இதுதான்!
Why do you mislead readers by saying in the title of news ‘one more arrested’?
Ok. Sorry. Your tile is correct.
title