திண்டுக்கல்லில் தொழிலதிபர் ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் இன்று (நவம்பர் 29) காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மணல் குவாரிகளில் நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்து, அதன் மூலம் கிடைத்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகக் கூறி, கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது.
திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், திண்டுக்கல், வேலூர் என மணல் குவாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
புதுக்கோட்டையில் மணல் குவாரி தொழிலதிபரான எஸ்.ஆர் எனப்படும் ராமச்சந்திரன் கார்ப்பரேட் அலுவலகம், திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம், சென்னையைச் சேர்ந்த ராஜ்குமார், ரத்தினத்தின் உறவினர் கோவிந்தன், கரிகாலன் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பொறியாளர் திலகம், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது.
அமலாக்கத்துறை நடவடிக்கைகள் தொடர்ந்ததால், அரசு மணல் குவாரிகளின் செயல்பாடுகள் முடங்கின. இந்தநிலையில், மீண்டும் மணல் குவாரிகளை இயக்குவதற்கு அரசு முடிவெடுத்திருப்பதாக கடந்த நவம்பர் 27-ஆம் தேதி மின்னம்பலத்தில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தநிலையில், திண்டுக்கல் ஜிடிஎன் சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினத்தின் வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தரணி குழும நிறுவனரான ரத்தினம், கலைக்கல்லூரி, போக்குவரத்து உள்பட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார்.
புதுக்கோட்டையில் பாஜக மேற்கு மாவட்ட பொருளாளர் முருகானந்தம் மற்றும் அவரது சகோதரர் பழனிவேல் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், தொழிலதிபர் ரத்தினம் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருப்பூரில் பயங்கரம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை! -நகைக்காக நடந்ததா?
“ஓபிஎஸ் மீதான சூமோட்டோ வழக்கு விசாரணைக்கு இடைக்காலத்தடை” – உச்சநீதிமன்றம் உத்தரவு!