தமிழகத்தின் முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஒன்றான நீலகிரிக்கு இன்று (மே 7) முதல் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் அம்மாவட்டத்தின் எல்லை சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், பலரும் குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
இந்தாண்டு மே மாதம் தொடங்குவதற்கு முன்னரே அங்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து கொண்டே இருந்தது.
இதனையடுத்து போக்குவரத்து நெரிசலுடன் தங்கும் விடுதி மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் அவதிப்படும் சூழ்நிலை நிலவியது.
இதனை கருத்தில் கொண்டு, இன்று (மே 7) முதல் ஜூன் 30ஆம் தேதி வரை ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக அரசு வெளியிட்டது.
அதன்படி இன்று காலை முதல் நீலகிரிக்குள் வரும் வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட 12 இடங்களில் உள்ள சோதனை சாவடிகளில் மாவட்ட வருவாய்த் துறையினர் இன்று காலை 6 மணி முதல் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே தமிழ்நாடு – கேரளா எல்லைப்பகுதியான கூடலூர் நாடுகாணி உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் 2 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து வாகனங்கள் நிற்கின்றன.
பலரும் இ-பாஸ் நடைமுறை தெரியாமல், நீலகிரிக்கு வந்த பிறகு ஆன்லைனில் விண்ணப்பிக்கின்றனர். நெட்வொர்க் பிரச்னை மற்றும் ஒரே நேரத்தில் பலர் இ-பாஸ் பெற முயற்சி செய்வதால் OTP வர தாமதமாகிறது.
மேலும் இ-பாஸ் பெறுவதற்காக பயணிகள் காத்திருக்கும் நிலை இருப்பதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்களுடன் வந்த பயணிகள் சிரமத்தை சந்தித்துள்ளனர்.
வெளியூர்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வருபவர்கள் tnega.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இ-பாஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மூன்று ஆண்டு நிறைவு: கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை!
தன்னை அமிதாப் பச்சனுடன் ஒப்பிட்ட கங்கணா… ரசிகர்கள் கேலி!