தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு இன்று (செப்டம்பர் 10) முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஆணையம் அறிவித்தது.
தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அடுத்த மாதம் அக்டோபர் முதல் அமலுக்கு வரும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று முதல் தமிழ்நாட்டில் புதிய மின் கட்டணம் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் தற்போது உயர்த்தப்படுகிறது. இந்த புதிய மின்கட்டண உயர்வானது வரும் 2026-27 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாயும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றுக்கு 72.50 ரூபாயும், உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்தப்படும்.
அதேவேளையில், தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19 சதவீதம்) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை என்றும், அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா