சிலர் தினமும் இனிப்பு சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இன்னும் சிலர் சாப்பிட்டு முடித்ததும் இனிப்பு சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்களும் இனிப்பு சாப்பிடும் பழக்கத்தை மட்டும் என்னால் நிறுத்த முடியவில்லை… இது நல்லதா, இதை எப்படி நிறுத்துவது என்கிற கேள்விகளை எழுப்புகிறார்கள். இதற்கான தீர்வு என்ன?
“இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற உணர்வு, உடலில் ஏதோ வைட்டமின்கள், தாதுச்சத்துகள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகளின் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.
கவனமாகவும் பார்த்துப் பார்த்து சாப்பிடுவதாகச் சொல்கிறவர்களும் சரிவிகித உணவாகத் தேர்வு செய்து சாப்பிட்டார்கள் என்றால் இந்த இனிப்புத் தேடல் உணர்வு குறைவதை உணர்வார்கள்.
உணவில் புரதச்சத்து எவ்வளவு சேர்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். இந்தியர்களின் உணவில் புரதச்சத்துக் குறைபாடு என்பது பரவலாகக் காணப்படுகிறது.
பிரதான உணவில் 20 முதல் 30 கிராம் அளவுக்கும், ஸ்நாக்ஸில் 5 முதல் 10 கிராம் அளவுக்கும், புரதச்சத்து இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தூக்கத்துக்கும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்பதைப் பலரும் உணர்வதே இல்லை. இரவில் 9.30 மணி முதல் 10 மணிக்குள் தூங்குவதுதான் சரியான பழக்கம்.
அந்த நேரத்தில் தூங்கும்போதுதான் உடல் உறுப்புகளின் பழுதுபார்க்கும் வேலை சிறப்பாக நடக்கும். செல்கள் புத்துணர்வடையும். ஹார்மோன் சமநிலையின்மை சரி செய்யப்படும்.
சரியான நேரத்துக்குத் தூங்க வேண்டுமானால், இரவில் கேட்ஜெட் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். மாலை வேளைகளில் கடினமான உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். டி.வி பார்ப்பதைக் குறைக்க வேண்டும். ஸ்ட்ரெஸ்ஸைத் தூண்டும் விஷயங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
இவை தவிர ஒருவரின் ஆளுமையும் இந்த விஷயத்தில் கவனிக்கப்பட வேண்டியதாகிறது. இனிப்பைப் பார்த்தால் சிறிதளவு மட்டும் எடுத்துக்கொண்டு திருப்தியடைபவர்களும் இருக்கிறார்கள்.
பெரிய பார் சாக்லேட்டையும் முழுவதுமாகச் சாப்பிட்டு முடிப்பவர்களும் இருக்கிறார்கள்.
இப்படிச் சாப்பிடுவதன் பின்னணியில் அவர்களுக்கு கடுமையான மன அழுத்தம் ஏதேனும் உள்ளதா என்றும் கவனிக்க வேண்டும்.
பலருக்கும் இந்தப் பழக்கம் பல ஆண்டுகளாகத் தொடரும். அவர்கள் ஒரே இரவில் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்த நினைப்பது சாத்தியமில்லை.
அது உளவியல் ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதால் முதல்கட்டமாக ஆரோக்கியமான இனிப்புகளைச் சாப்பிடப் பழகலாம். அடுத்தகட்டமாக அளவைக் குறைப்பது சரியானதாக இருக்கும்.
இதையெல்லாம் செய்வதற்கு முன் மருத்துவரை அணுகி, உடலில் ஏதேனும் சத்துக் குறைபாடு இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து, அப்படியிருப்பின் அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்வது அவசியம்” என்கிறார்கள் டயட்டீஷியன்கள்.
கிச்சன் கீர்த்தனா: சீஸ் சாண்ட்விச்!