செங்கல்பட்டு அருகே இன்று (மே 16) அதிகாலை நடந்த கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு அருகே உள்ள புக்கத்துறை கூட்டுச்சாலை பகுதி தென் தமிழ்நாட்டை வடதமிழ்நாட்டோடு இணைக்கும் முக்கியமான சாலைகளில் ஒன்று.
இந்த சாலை வழியாகத்தான் தென்மாவட்டங்களில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகள், அரசு பேருந்துகள், லாரிகள் ஆகியவை சென்னைக்குள் செல்லும்.
இரவு நேரத்தில் சொந்த ஊரில் இருந்து கிளம்பி காலையில் சென்னை வருபவர்கள் அதிகம் என்பதால், இரவு முதல் விடியும் வரை இந்த சாலையில் பேருந்துகள், கார்கள் அதிகளவு கடந்து செல்லும்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே புக்கத்துறை கூட்டுச்சாலை பகுதியில் இன்று (மே 16) லாரி, ஆம்னி பேருந்து, அரசு பேருந்து மோதிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் இருந்து பூந்தமல்லிக்கு கிரானைட் கற்களை ஏற்றிச் சென்ற லாரி பழுதாகி நின்றதாக தெரிகிறது.
அப்போது அந்த வழியாக திருச்சியில் இருந்து வந்த ஆர்.கே.டி சொகுசு பேருந்து அந்த லாரி மீது மோதியிருக்கிறது.
அதிவேகமாக வந்து மோதியதில் பேருந்தின் இடது பக்கத்துக்குள் லாரியின் ஒரு பகுதி சென்றது.
இந்த விபத்தை தொடர்ந்து, முசிறியில் இருந்து வந்த அரசு பேருந்து அந்த ஆம்னி பேருந்து மீது மோதி நின்றது.
அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில் 3 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டது. மேல்மருவத்தூரைச் சேர்ந்த மருத்துவர் ராஜேஷ், சென்னை கொடுங்கையூரை சேர்ந்த தனலட்சுமி, பிரவீன் ஆகியோர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. உயிரிழந்த மற்றொருவர் யார் என இன்னும் தெரியவரவில்லை.
இந்த விபத்தில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோரை மீட்டு, தீயணைப்புத் துறையினரும், போலீசாரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இவ்விபத்து குறித்து படாளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா