ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வனம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்து வருகிறது.
இதுதொடர்பான வழக்கு இன்று (ஏப்ரல் 29) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜரானார்கள்.
அப்போது, “ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்கிறது” என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், “ஊட்டிக்கு தினமும், 11,500 கார்கள், 1,300 வேன்கள், 600 பேருந்துகள் மற்றும் 6,500 இருசக்கர வாகனங்கள் என 20 ஆயிரம் வாகனங்கள் வருகிறது” என நீதிமன்றத்தில் அரசு அறிக்கை தாக்கல் செய்தது.
இதையடுத்து நீதிபதிகள், “இத்தனை வாகனங்கள் சென்றால் நிலைமை மோசமாகும். உள்ளூர் மக்கள் நடமாட இயலாது. சுற்றுச்சூழலும், விலங்குகளும் பாதிக்கப்படும்.
ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம். ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை, இடைக்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, “கொரோனா காலத்தில் நடைமுறையில் இருந்தது போல இ – பாஸ் நடைமுறையை ஊட்டி, கொடைக்கானலில் கொண்டு வர வேண்டும். மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இ.பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும்” என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டனர்.
“இ – பாஸ் வழங்கும் முன், வாகனங்களில் வருவோரிடம், என்ன மாதிரியான வாகனம், எத்தனை பேர் வருகின்றனர், எத்தனை நாள் ஊட்டியில் தங்குவார்கள்? ஒரு நாள் சுற்றுலாவா? என அனைத்து விவரங்களையும் பெற வேண்டும். இ பாஸ் உள்ள வாகனங்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். உள்ளூர் மக்களுக்கு விலக்களிக்க வேண்டும் ” எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.
இ பாஸ் நடைமுறை தொடர்பாக இந்திய அளவில் விரிவான விளம்பரங்களை கொடுக்க வேண்டும். இ பாஸ் வழங்குவதற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள்,
ஊட்டியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை ஜூலை 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
செந்தில்பாலாஜி ஜாமீன்… உச்ச நீதிமன்றத்தில் ED தாக்கல் செய்த 93 பக்க அபிடவிட்டில் என்ன இருக்கிறது?
சென்னை கடற்கரை – வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!