E.coli indentified more in tondairpet piped supply

பரவும் டெங்கு… சென்னை குடிநீர் தரம் என்ன? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!

தமிழகம்

தமிழ்நாடு முழுதும் குறிப்பாக சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்திருப்பதாக கூறப்படும் நிலையில்,  மெட்ரோ நீர் தர உத்தரவாதப் பிரிவின் பகுப்பாய்வில்  பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதன்படி, சென்னை  மாநகரிலேயே தண்டையார்பேட்டையில் விநியோகிக்கப்படும் நீர் தான் அதிகம் மாசுபட்டிருக்கிறது  என்று சென்னை மெட்ரோ நீர் தர உத்தரவாத பிரிவின் பகுப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. கடலூர், திருவாரூர், மதுரை, கும்பகோணம், புதுக்கோட்டை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஓரிரு தினங்களில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வெண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

குறிப்பாக வீட்டிற்கு அருகே நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், சுத்தமான நீரை அருந்த வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குடிநீரில் ஈ.கோலை பாக்டீரியா

இந்நிலையில் சென்னை தண்டையார்பேட்டையில் விநியோகிக்கப்படும் நீரில் அதிகளவு ஈ.கோலை என்ற பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை சென்னை மெட்ரோ நீர் தர உத்தரவாத பிரிவு நடத்திய பகுப்பாய்வில் நகரின் குழாய் நீர் விநியோகத்தில் 27 முறை ஈ.கோலை கண்டறியப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக தண்டையார்பேட்டையில் 8 முறை ஈ.கோலை கண்டறியப்பட்டுள்ளது. திருவிக நகரில் 7 முறையும், அண்ணாநகர் மற்றும் மணலியில் தலா 4 முறையும் கடந்த 8 மாதங்களில் ஈ.கோலை கண்டறியப்பட்டுள்ளது.

திருவொற்றியூர், மணலி, மாதவரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட 15 மண்டலங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய பகுப்பாய்வில் 7 மண்டலங்களில் ஈ.கோலை கண்டறியப்பட்டுள்ளது.

ஈ.கோலை என்றால் என்ன?

எஸ்கெரிச்சியா கோலை (ஈ.கோலை) என்பது ஒரு வகையான பாக்டீரியா.  மனிதர்களின் உடலிலும் விலங்குகளின் உடலிலும் இந்த பாக்டீரியா இயற்கையாகவே வாழ்கிறது.

ஈ.கோலை பாக்டீரியா உணவை செரிக்கவும் கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது. ஆனால் அசுத்தமான உணவை எடுத்துக்கொள்ளும் போதும் சுகாதாரமில்லாத நீரை குடிக்கும் போதும் இது தீங்கு செய்யும் பாக்டீரியாவாக மாறுகிறது.

கடுமையான சிறுநீரக செயலிழப்புக்கு இதுவும் ஒரு காரணமாகும். சில சமயங்களில் உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளையும் ஈ.கோலை ஏற்படுத்தும்.

கழிவுநீரால் தண்ணீர் மாசுபடுகிறது

தண்ணீரில் ஈ.கோலை இருப்பது கழிவுநீரால் தண்ணீர் மாசுபடுவதை சுட்டிக்காட்டுவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அசுத்தமான தண்ணீரை உட்கொள்வது டைபாய்டு, காலரா, ஹெபடைடிஸ் மற்றும் பிற வயிற்றுப்போக்கு கோளாறுகள் போன்ற நீரினால் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கும் என்று ஆஸ்டர் மருத்துவமனையின் தொற்று நோய் மருத்துவர் டாக்டர் அனுப் ஆர் வாரியர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 2 ஆம் தேதி விழுப்புரத்தில் கழிவு நீர் கலந்த நீரை குடித்த பெண் உயிரிழந்ததை அடுத்து தண்ணீர் மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை குடிநீர் வாரியத்தின் தர உறுதி பிரிவு, “குடிநீர் வாரியம் தினசரி 10 முதல் 20 ரேண்டம் தண்ணீர் மாதிரிகளை எடுக்கிறது.

தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனைகள் அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளின் விவரங்களை எங்களுக்கு அளிக்கின்றனர். தொற்று நோய்க்கு ஈ.கோலை காரணமாக இருந்தால், அது அப்பகுதி பொறியாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. அசுத்தமான நீர் வெளியேற்றப்பட்டு குளோரின் சேர்க்கப்பட்ட பின்னர் அவர்கள் நீரின் தரத்தை சோதிக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.

குடிநீர் வாரியத்தின் முன்னாள் அதிகாரி எஸ்.சீனிவாசன் கூறுகையில், “பல தசாப்தங்களாக நிலத்தடியில் உள்ள பழமையான குழாய்கள் துருப்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கழிவுநீர் தண்ணீரை மாசுபடுத்துகிறது. சமீப காலமாக, நகர் முழுவதும் பல்வேறு குடிமராமத்து திட்டப்பணிகள் நடைபெற்று வருவதால், கழிவுநீர் குழாய்கள் உடைவது அல்லது ஊற்று கசிவுகள் ஏற்படுவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சல் ஒரு புறம் அச்சுறுத்தி வரும் நிலையில் குடிநீரில் ஈ.கோலை கண்டறியப்பட்டிருப்பது மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மோனிஷா

உலகக்கோப்பை: எச்சரிக்கும் தென்னாப்பிரிக்கா… பின்வாங்கும் ஆஸ்திரேலியா…

நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்க்கையை நடத்த முடியுமா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *