சென்னையில் சூட்கேஸில் பெண் உடல் இருந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
துரைப் பாக்கம் குமரன்குடில் அருகில் சாலை ஓரத்தில் கட்டுமான பணி நடக்கும் இடத்தில் புதியதாக ஒரு சூட்கேஸ் கிடந்துள்ளது. அதை பார்த்த அந்த கட்டிட காவலாளி, புதிதாக இருக்கிறதே என அந்த சூட்கேஸை எடுக்க சென்றுள்ளார்.
அப்போது சூட்கேஸில் இருந்து ரத்தம் கசிந்து வாடை வீசியிருக்கிறது. இதனால் பயந்துபோன காவலாளி அந்த வழியாக சென்ற போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக, துரைப்பாக்கம் காவல் நிலைய எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர் என அனைவரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அங்கு சூட்கேஸை திறந்து பார்த்தபோது, அழுகும் நிலையில் ஒரு பெண் உடல் இருந்ததை கண்டதும், இந்த தகவலை உயர் அதிகாரிகளான துணை ஆணையர் பொன் கார்த்திக்குமார், இணை ஆணையர் சிபி சக்ரவர்த்தி ஆகியோருக்கு தெரிவித்தனர்.
அவர்கள் துரைபாக்கம் காவல் நிலையத்துக்கு சென்று அந்த பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளி யார்? என உடனடியாக விசாரிக்க உத்தரவிட்டனர்.
துணை ஆணையர் பொன். கார்த்திக்குமார் தனது ஸ்பெஷல் டீமையும் களத்தில் இறக்கினார். தொழில்நுட்ப உதவியுடன் தம் கால் போட்டு அலைப்பேசி விவரங்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் ஆகியவற்றை ஆராய்ந்தனர்.
இதில் தான் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது,
“சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்ததில் நேற்று இரவு ஒருவர் சூட்கேஸை இழுத்து வருவது பதிவாகியிருந்தது. அதை புகைப்படம் எடுத்துக்கொண்டு அதே நபர் வேறு எந்தெந்த பகுதிகளுக்கு சென்றுள்ளார் என கண்டுபிடிக்க அந்த பகுதியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் போலீசார் ஆராய்ந்தனர்.
இதில் பெருங்குடி மெயின் ரோட்டில் இருந்து 17ஆம் தேதி இரவு அந்த பெண்ணை அழைத்து சென்றதும் பதிவாகியிருந்தது.
அதோடு நேற்று (செப்டம்பர் 18) பகலில் குமரன்குடிலில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ள ரோஷன் பேக்ஸ் கடைக்கு சென்றதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது.
இதையடுத்து ரோஷன் கடைக்கு சென்ற போலீசார், பெண் உடல் இருந்த சூட்கேஸின் புகைப்படத்தையும், சிசிடிவி கேமராவில் பதிவான நபரின் புகைப்படத்தையும் கடை ஊழியர்களிடம் காட்டி விசாரித்தனர்.
இந்த நபர் உங்கள் கடைக்கு வந்து இந்த சூட்கேஸ் வாங்கினாரா என்று கேட்டு கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களையும் பார்த்தனர்.
அப்போது, அந்தநபர் தான் சூட்கேஸ் வாங்கினார் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் பெயர் மணிகண்டன் என்பதும் தெரியவந்தது. சூட்கேஸ் வாங்கும் போது அவர் கொடுத்த செல்போன் எண் மற்றும் முகவரியை போலீசார் கேட்டு பெற்றனர்.
பின்னர் அந்த செல்போன் நம்பர் லொக்கேஷன் காட்டும் இடத்துக்கு சென்ற போலீசார் அங்கிருந்தவர்களிடம் மணிகண்டனின் புகைப்படத்தை காட்டி, ‘இவரை பார்த்திருக்கிறீர்களா?’ என்று விசாரித்து அவரது வீட்டையும் கண்டுபிடித்து சென்றனர்.
குமரன்குடிலில் மணிகண்டன் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று கதவை தட்டியதும், போலீசாரை பார்த்த அவர் பயந்துபோய் பதற்றத்துடன் பேசினார்.
அந்த வீட்டில் இருந்து ரத்த வாடையும் வீசியது. உடனே அவரது செல்போனை பறிமுதல் செய்துகொண்டு அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அந்த பெண் பெயர் என்ன… அவருடைய செல்போன் எங்கே என்று விசாரித்ததில், அவர் பெயர் தீபா என்று கூறி அப்பெண்ணின் செல்போனையும் கொடுத்தார் மணிகண்டன்
இருவரது செல்போன் எண்களையும் ஆராய்ந்ததில் செப்டம்பர் 17ஆம் தேதி இரவு மணிகண்டன் தீபாவுக்கு அழைத்து பேசியதும், தீபா மணிகண்டனை தொடர்புகொண்டு சிலமுறை பேசியதும். தீபாவுக்கு 2000 ஆயிரம் ரூபாய் ஜிபேவில் அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து மணிகண்டனிம் போலீசார் விசாரணை நடத்தினர்.
“நீ என்ன ஊர்?
சிவகங்கை மாவட்டம்
இங்கே எத்தனை மாதமாக தங்கியிருக்கிறாய்?
சிறிது நாட்களுக்கு முன்னர்தான் வந்தேன்… மாமா வீட்டுக்கு வந்திருக்கிறேன்.
இந்த பெண் யார்? எதற்காக கொலை செய்தாய்?
இந்த பெண் யார் என்றே எனக்கு தெரியாது… என்னுடைய மாமா குடும்பத்தினர் வெளியூருக்கு சென்றிருக்கும் இந்த நேரத்துல விலைமாது பெண்கள் யாராவது கிடைப்பார்களா என நெட்டில் தேடிப்பார்த்தேன்.
அப்போது ஒரு நம்பருக்கு பேசினேன். அதில் பேசியவர் இரண்டாயிரம் ரேட் பேசி தீபா நம்பரை கொடுத்தார். என் நம்பரையும் தீபாவிடம் கொடுத்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மெயின் ரோட்டிற்கு வந்து அழைத்து போகுமாறு தீபா என்னிடம் சொன்னார். நானும் அவரை அழைத்து வந்து உல்லாசமாக இருந்தேன்.
இரவே புறப்படுவதாக தீபா கூறினார். நானும் சரி என்று அவர் ஜிபேவுக்கு பேசிய தொகையான 2000 ரூபாயை அனுப்பிவிட்டேன்.
கூடுதலாக 10000 கேட்டார்… ‘நான் பேசும் போது டூதவுசனு (2000) சொன்னாங்க… இப்ப 12,000 கேக்குறீங்கனு’ வாக்குவாதம் ஏற்பட்டது.
அதற்கு அவர், நான் காரில் வந்து போகவேண்டும்… அதற்கான செலவுகள் எல்லாம் சேர்த்து, ’டுவல்தவுசன்னு;(12000) சொன்னார். நீங்கள்தான் ‘டூதவுசன்’னு தப்பா புரிந்துகொண்டீர்கள் என்று கோபமாக பேசினார்.
நான் இரண்டாயிரத்துக்கு மேல் தரமாட்டேன்… வெளியில் போங்கள் என்று சொன்னேன். அவர் என்னிடம் சண்டை போட்டு, நீ பணம் தரவில்லை என்றால் சத்தம் போட்டு ஊரை கூட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு போவேன் என்று மிரட்டினார். .
வேறு வழி தெரியாமல் அருகில் இருந்த சுத்தியை எடுத்து அவர் தலையில் ஒரே அடி அடித்ததும் மயங்கி விழுந்துவிட்டார். கொஞ்ச நேரத்துக்கு பின் தூக்கி பார்த்த போது, பேச்சு மூச்சு இல்லை.
என் மாமா குடும்பத்தினர் வருவதற்குள் உடலை மறைத்துவிட வேண்டும், கொலை செய்த விஷயம் போலீசுக்கு தெரியக்கூடாது என யோசித்து யோசித்து இரவு முழுவதும் தூங்கவில்லை. மறுநாள் 18ஆம் தேதி ரோஷன் கடைக்கு சென்றுஅந்த உடல் பெட்டிக்குள் அடங்குமளவுக்கு சுமார் 4 அடி உயரத்தில் சூட்கேஸ் வாங்கி வந்தேன்.
வீட்டிற்கு வந்து தீபா உடலை அந்த சூட்கேஸில் மடக்கி வைத்து மூடிவிட்டேன். இதை வெளியில் எடுத்து செல்ல நேற்று இரவு முழுவதும் காத்திருந்தேன். ஆள் நடமாட்டம் இருக்கிறதா என்று பார்க்க நள்ளிரவில் இரண்டு முறை மெயின் ரோட்டுக்கு சென்று வந்தேன்.
வீட்டில் இருந்து 150மீ தூரத்தில் உள்ள கட்டிட வேலை நடைபெறும் இடத்தில் சூட்கேஸை போட்டுவிட்டு வந்துவிட்டேன்.
போலீஸ் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் இப்படி மாட்டிக்கொள்வேன் என்று எனக்கு தெரியாது என்று வாக்குமூலம் அளித்தார்” என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வணங்காமுடி
நெய்யில் விலங்குகள் கொழுப்பு: திருப்பதி லட்டு பிரியர்களை அதிரவைத்த ஆய்வக ரிப்போர்ட்!
பாலியல் புகார் : ’காவாலா’ பாடல் நடன இயக்குநர் கைது!
தேர்தல் வாக்குறுதி : காங்கிரஸ் ரூ.2000 பாஜக ரூ.2100