தபேதார் மாதவி லிப்ஸ்டிக் பயன்படுத்தியதால் தான் அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார் என்ற தகவல் தவறானது என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா விளக்கமளித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் தபேதாராக 50 வயதான மாதவி பணியாற்றி வந்தார். மேயர் வருகிறார் என்பதை அறிவிக்கும் விதமாக அவருக்கு முன்பாக செல்வதுதான் தபேதாரின் பணி.
இவருக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி மேயர் பிரியாவின் தனிச்செயலாளர் சிவசங்கர் மெமோ வழங்கியுள்ளார். அதில் “நீங்கள் பணிக்குத் தாமதமாக வருகிறீர்கள், கொடுக்கப்பட்ட பணியைச் சரியாகச் செய்வதில்லை மற்றும் உயரதிகாரிகளின் உத்தரவை மீறியுள்ளீர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு தபேதார் மாதவி “எனது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தான், ஆகஸ்ட் 6-ஆம் தேதி மட்டும் நான் அரை மணி நேரம் தாமதமாக அலுவலகத்துக்கு வந்தேன்.
நீங்கள் என்னை லிப்ஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்று முன்பு சொன்னீர்கள். அந்த உத்தரவை மட்டும்தான் நான் மீறியுள்ளேன். அது குற்றம் என்றால், லிப்ஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்ற அரசாங்க உத்தரவை எனக்கு காண்பியுங்கள்.
மேலும், மற்ற துறைகளைச் சேர்ந்த அலுவலகர்களிடம் பேசக்கூடாது மற்றும் ரிப்பன் கட்டிடத்தில் இருக்கும் எந்த துறைக்கும் நான் செல்லக்கூடாது என்று நீங்கள் அளித்திருந்த மெமோவில் குறிப்பிட்டுள்ளீர்கள்.
இது அடிப்படை மனித உரிமைகளின் மீறல் ஆகும். பணி நேரத்தில் நான் எனது பணி செய்யாது இருந்தால் தான் நீங்கள் கொடுத்துள்ள மெமோ செல்லுபடியாகும்” என்று மேயர் பிரியாவின் தனிச்செயலாளர் சிவசங்கருக்குப் பதிலளித்திருந்தார். இந்த பதிலை அனுப்பிய சிறிது நேரத்தில், அவரை மணலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேயர் பிரியா இந்த சம்பவம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் “தபேதார் மாதவி சில தினங்களுக்கு முன்பு ரிப்பன் கட்டடத்தில் நடந்த ஃபேஷன் ஷோவில் பங்கேற்றுள்ளார். அதில் அவரது தோற்றமும், செயலும் சரியாக இல்லை என்று பொதுமக்கள் தெரிவித்திருந்தார்கள்.
இதுமட்டுமல்லாமல், அவர் பயன்படுத்தும் லிப்ஸ்டிக் பளிச்சென்று இருக்கிறது. அதை மாற்றவும் என்று அவரிடம் எனது தனிச் செயலாளர் சிவ சங்கர் தெரிவித்திருந்தார். லிப்ஸ்டிக் பயன்படுத்தியதால் தான் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பது தவறான தகவல்” என்று தெரிவித்தார்.
இது குறித்து தபேதார் மாதவி கூறுகையில் “மேயரின் உதவியாளர்கள் பளிச்சென்ற லிப்ஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என்றும் வெளிர் நிற புடவைகளை உடுத்துமாறு என்னிடம் தொடர்ந்து சொல்லிவந்தார்கள். நான் லிப்ஸ்டிக் பயன்படுத்தியதால் தான் என்னை மணலிக்கு பணியிட மாற்றம் செய்துள்ளார்கள்.
எனக்கு தண்டனை அளிக்கும் விதமாகத்தான், பக்கத்தில் இருக்கும் அண்ணா நகர், அம்பத்தூர், வளசரவாக்கம் போன்ற இடங்களுக்குப் பதிலாக மணலிக்கு பணியிடமாற்றம் செய்துள்ளார்கள்” என்று தெரிவித்தார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கார்த்தி உடனடியாக மன்னிப்பு கேட்டது ஏன்? – கஸ்தூரி சொல்லும் ரகசியம்!
திருப்பதி லட்டுவும்… கும்பகோணத்தில் வெட்டப்பட்ட 23 ஆடுகளும்! அம்பலப்படுத்தும் அமரர் கல்கி
காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்கப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!